Published : 24 Jul 2020 18:09 pm

Updated : 24 Jul 2020 18:10 pm

 

Published : 24 Jul 2020 06:09 PM
Last Updated : 24 Jul 2020 06:10 PM

விவசாயிகளைப் பாதிக்கும் அவசரச் சட்டங்கள்; ஜூலை 27-ல் கருப்புக் கொடி போராட்டம்: விவசாயிகள் சங்கம் தீர்மானம்

emergency-laws-affecting-farmers-black-flag-struggle-on-july-27-farmers-association-resolution

சென்னை

அனுபவ நிலங்களிலிருந்து ஆதிவாசி மக்களை வெளியேற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு, வன உரிமைக் கமிட்டிகளை கூட்டுவதற்கும், வன உரிமைச் சட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் சண்முகம் இன்று விடுத்துள்ள அறிக்கை


“தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் நேற்று காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மத்திய பாஜக அரசு பொது முடக்கத்தைப் பயன்படுத்தி மக்கள் மீது அடுக்கடுக்கான தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. அவசரச் சட்டங்கள், நிர்வாக உத்தரவுகள் மூலம் இந்தியாவின் நலனுக்கு விரோதமான செயல்களைத் தீவிரமாகச் செயல்படுத்துகிறது. தனியார் முதலாளிகள், கார்ப்பரேட் கம்பெனிகளின் நலன்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் அது தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மின்சார சட்டத்திருத்த மசோதா 2020, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் 2020, விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம் 2020 ஆகிய சட்டங்கள் இந்திய விவசாயிகளையும், விவசாயத்தையும் ஆழக்குழி தோண்டிப் புதைக்கும் மோசமான சட்டங்களாகும்.

இந்தச் சட்டங்கள் அனைத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தமிழ்நாடு சார்பாக ஜுலை 27-ம் தேதி வீடுகள்தோறும் கருப்புக் கொடியேற்றி மத்திய அரசுக்கு வலுமிக்க எதிர்ப்பைத் தெரிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தை முழுமையாக வெற்றியடையச் செய்வதென்று மாநிலக் குழு தீர்மானிக்கிறது. உழவுத் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் உணர்வுபூர்வமாக பொதுமக்கள் இதில் பங்கேற்று கருப்புக் கொடிகளால் தமிழகம் நிறைந்தது என்ற நிலையை உருவாக்கிட வேண்டும். அத்துடன் பொதுமக்களின் பேராதரவை திரட்டும் வகையில் “ஒரு கோடி கையெழுத்து இயக்கம்” வெற்றி பெறவும். வீடு வீடாகச் சென்று கையெழுத்து பெறுவதில் முனைப்புடன் ஈடுபடுவதென்று மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.

பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜுன் 12-ம் தேதி திறக்கப்பட்டாலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மாதவாரியாக தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர் கர்நாடகத்திடமிருந்து வந்து சேரவில்லை. இதனால் திட்டமிட்டபடி சம்பா சாகுபடிக்கு தண்ணீர் உத்தரவாதமாகக் கிடைக்குமா என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, தமிழக அரசு மாதவாரியாக தமிழகத்திற்குரிய தண்ணீரைப் பெறுவதில் உரிய கவனம் செலுத்த வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.

* தமிழ்நாட்டின் பல்வேறு மலைப்பகுதிகளில் ஆதிவாசி மக்கள் மீது வனத்துறையினர் தாக்குதல் தொடுப்பது, பணம் பறிப்பது, பொய் வழக்குப் போடுவது போன்ற சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். வன உரிமைச் சட்டம் 2006ன் படி பட்டா வழங்குவதற்கான பல்வேறு மட்ட வன உரிமைக் கமிட்டிகள் கடந்த ஓராண்டு காலமாக கூட்டப்படாததால் இச்சட்டப்படி மக்களுக்கு வழங்க வேண்டிய பட்டா உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்பட முடியாமல் இருக்கிறது.

இதனால் அனுபவ நிலங்களிலிருந்து ஆதிவாசி மக்களை வெளியேற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளதற்கு மாநிலக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழக அரசு, வன உரிமைக் கமிட்டிகளை கூட்டுவதற்கும், வனஉரிமைச் சட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பால் முழுவதையும் கொள்முதல் செய்வதற்குப் பதிலாக திருப்பி அனுப்பும் செயல் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே, தமிழக அரசு உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பால் முழுவதையும் கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மாநில அரசுகளுக்கு உள்ள உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கூட்டுறவு அமைப்புகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு சென்றுள்ளது. இதன் விளைவாக, விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்படுவதுடன், படிப்படியாக ஆரம்ப நிலைக் கூட்டுறவு அமைப்புகளே இல்லாமல் அழித்தொழிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.

கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கு அனைத்து விவசாயிகளும் மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்குத் தொடங்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். விவசாயக் கடன் அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்பட வேண்டுமென்று நிபந்தனை விதிக்கப்படுவது போன்ற காரணங்களால் விவசாயிகள் கடன் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

கூட்டுறவு அமைப்புகள் மாநில அரசின் கீழ் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டுமென்று மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது. கடன் கோரும் அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனையின்றி விவசாயக் கடன் வழங்குவதை உறுதிப்படுத்துமாறு தமிழக அரசை மாநிலக்குழு கோருகிறது”.

இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறவிடாதீர்!


Emergency LawsAffecting FarmersBlack Flag StruggleJuly 27Farmers Association Resolutionவிவசாயிகளை பாதிக்கும் அவசர சட்டங்கள்ஜூலை 27-ல் கருப்புக்கொடி போராடம்விவசாயிகள் சங்கம்தீர்மானம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author