Published : 23 Jul 2020 06:03 PM
Last Updated : 23 Jul 2020 06:03 PM

அறிவித்தபடி ஊதிய உயர்வு வேண்டும்! - அரசுக்குக் கோரிக்கை வைக்கும் தூய்மைப் பணியாளர்கள்

‘கைகளைத் தட்ட வேண்டாம்; கால்களைக் கழுவ வேண்டாம்; எங்களுக்கு அறிவித்த ஊதியத்தை உடனே வழங்கு’ என்ற முழக்கத்துடன் இன்று சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். தங்களுக்கு உயர்த்தி அறிவிக்கப்பட்ட ரூ.1,000 ஊதியத்தைத் தமிழக அரசு இன்னமும் வழங்காதிருப்பது குறித்து தூய்மைப் பணியாளர்கள் மனம் குமுறிக் கொண்டிருப்பதாகக் கடந்த 11.07.2020 ‘இந்து தமிழ் திசை’ இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

தமிழகம் முழுவதும் ரூ. 2,600 தொகுப்பூதியத்தில் ஊராட்சிகள்தோறும் பணியமர்த்தப்பட்டவர்கள் இந்தத் தூய்மைப் பணியாளர்கள். கடந்த ஏப்ரல் முதல் இவர்களின் தொகுப்பூதியத்தை ரூ.3,600 ஆக மாற்றி வழங்கப்போவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அந்த அறிவிப்பு அமலாவதற்குள் கரோனா வந்துவிட, கூடுதல் பணிச் சுமையுடன் இவர்கள் பணிபுரிகிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் பிளீச்சிங் பவுடர் போடுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

கரோனா பரவல் ஆரம்பித்த புதிதில், ‘கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். அவர்களுக்காகக் கையைத் தட்டுவோம். விளக்கேற்றுவோம்; அவர்கள் காலைக் கழுவி பூஜை செய்வோம்’ என்றெல்லாம் பிரச்சாரங்கள் நடந்தன. அவ்வண்ணமே செய்து நிறைய பேர் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், வீடியோக்களாகப் பகிர்ந்தார்கள். ஆனால், அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.1,000 ஊதிய உயர்வு கிடைக்காததால் தூய்மைப் பணியாளர்களின் துயரம் இதுவரை முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில், இன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சத்தியமங்கலம், தாளவாடி, பவானிசாகர் ஆகிய மூன்று ஒன்றியங்களிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இதில் கலந்துகொண்டனர். ஈரோடு மாவட்ட உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கம் சார்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் பி.எல்.சுந்தரம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் வட்டாட்சியரைச் சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவையும் அளித்தார்கள்.

இது தொடர்பாக பி.எல்.சுந்தரம் பேசுகையில், “போராட்டத்தில் கலந்துகொண்ட மூன்று ஒன்றியத்தில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வாங்கும் ரூ.2,600 சம்பளம் என்பது வந்து போகிற செலவுக்குக்கூட போதாது. பெரும்பாலான தொழிலாளர்கள் இந்தப் பணியை விட்டுவிட்டு வேறு பணிக்குச் செல்லும் எண்ணத்தில் உள்ளார்கள். ஊதிய உயர்வு தொடர்பாக மார்ச் மாதமே அரசு அறிவித்துவிட்டாலும், கடந்த நான்கு மாதங்களாக அதற்குரிய அரசு ஆணைகள் பிறப்பிக்கப் படவில்லை. ஆகவே, உடனடியாக உள்ளாட்சித் துறை அமைச்சர் இது சம்பந்தமாக உரிய ஆணைகள் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x