Published : 21 Jul 2020 10:16 PM
Last Updated : 21 Jul 2020 10:16 PM

டாஸ்மாக் பணியில் கூடுதல் போலீஸார்: பொதுநல வழக்கில் காவல்துறை பட்டியல் தாக்கல்

சென்னை

கரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட விவகாரத்தில் பாதுகாப்புக்காக அதிக அளவில் ஈடுபடுத்தப்படுவது குறித்த பொதுநல வழக்கில் டிஜிபி சார்பில் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

கரோனா ஊரடங்கு காலத்திலும் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு மே மாதம் அனுமதி அளித்தது. கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளைவிட அதிக போலீஸார் மதுபானக் கடைகளின் பாதுகாப்புக்காகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது சம்பந்தமாக பொதுநல வழக்கு ஒன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

கோவையைச் சேர்ந்த தேசிய அனைத்து மத நண்பர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் பன்னீர்செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

அவரது மனுவில், “டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள போலீஸார் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், கூட்ட நெரிசலைத் தடுக்கவும், கரோனா தடுப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கான பணிகளில் அதிக போலீஸாரை ஈடுபடுத்தவும் உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக டிஜிபி சார்பில் உதவி ஐஜி இ.டி.சாம்சன் அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காகப் போதிய காவலர்கள் ஒதுக்கப்படுகின்றனர். அதுதவிர ரேஷன் கடை, மீன் சந்தை, காய்கறி அங்காடி, அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்கள் நடமாட்டம், கரோனா தாக்குதலில் கடடுப்படுத்தப்பட்ட பகுதி, தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள், சோதனைச் சாவடி, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் ஆகிய பணிகளிலும் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டாஸ்மாக் கடை பாதுகாப்புப் பணியில் குறைவான அளவு போலீஸாரே பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்து அதற்கான பட்டியல் மாநில அளவில் மண்டல வாரியாகவும், சென்னை உள்ளிட்ட நகர அளவிலும் தாக்கல் செய்யப்பட்டது.

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாதுகாப்பு மற்றும் பிற பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட போலீஸாரின் எண்ணிக்கை குறித்து தாக்கல் செய்த பட்டியலில், வடக்கு மண்டலத்தில் டாஸ்மாக் பணிக்கு 583 போலீஸாரும், பிற பணிகளுக்கு 7 ஆயிரத்து 749 போலீஸாரும்; மத்திய மண்டலத்தில் டாஸ்மாக் பணிக்கு 363 போலீஸாரும், பிற பணிகளுக்கு 5 ஆயிரத்து 295 போலீஸாரும்; மேற்கு மண்டலத்தில் டாஸ்மாக் பணிக்கு 887 போலீஸாரும், பிற பணிகளுக்கு 7 ஆயிரத்து 954 போலீஸாரும்; தெற்கு மண்டலத்தில் டாஸ்மாக் பணிக்கு 764 போலீஸாரும், பிற பணிகளுக்கு 11 ஆயிரத்து 876 போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சென்னை, சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற பெருநகரங்களில் டாஸ்மாக் பாதுகாப்புப் பணிக்கு 410 போலீஸாரும் பேரும், பிற பாதுகாப்புப் பணிகளுக்கு 10 ஆயிரத்து 545 போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த தமிழகத்தில் பிற பணிகளுக்கு 43 ஆயிரத்து 119 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் பாதுகாப்புப் பணிக்கு 3 ஆயிரத்து 7 போலீஸார் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் போதிய போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இவர்களைத் தவிர கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 9 ஆயிரத்து 326 ஆண்களும், 2 ஆயிரத்து 59 பெண்களும் என 11 ஆயிரத்து 385 பேர் ஈடுபடுத்தப்பட்டதாகவும் உதவி ஐ.ஜி. சாம்சன் அறிக்கையில் விளக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x