Published : 21 Jul 2020 06:01 PM
Last Updated : 21 Jul 2020 06:01 PM

அரசு நிர்ணயம் செய்த சந்தா தொகைக்கு மேல் வசூலிக்கும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை; அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்: கோப்புப்படம்

சென்னை

அரசு நிர்ணயம் செய்த சந்தா தொகைக்கு மேல் அதிக தொகை வசூலிக்கும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இன்று (ஜூலை 21) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சிறந்த கேபிள் டிவி சேவையை குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 16 ஆயிரத்து 712 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக 35 லட்சத்து 64 ஆயிரத்து 589 விலையில்லா எஸ்.டி. (SD) செட்டாப் பாக்ஸ்களையும், 3,728 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக ரூ.500 என்ற குறைந்த விலையில் 38 ஆயிரத்து 200 ஹெச்.டி. (HD) செட்டாப் பாக்ஸ்களையும் வழங்கியுள்ளது. தற்பொழுது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் ரூ.140+18% வரி என்ற மாதக்கட்டணத்தில் 61 கட்டணச் சேனல்களும், 137 கட்டணமில்லா சேனல்களும் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சந்தாதாரர்களுக்கு எஸ்.டி. செட்டாப் பாக்ஸ்கள் விலையில்லாமலும், ஹெச்.டி. செட்டாப் பாக்ஸ்கள் ரூ.500 என்ற குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. சந்தாதாரர்கள் மாத சந்தா கட்டணமாக ரூ.140+18% வரி மட்டும் செலுத்தினால் போதும். கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. கூடுதல் தொகை வசூல் செய்வதாகப் புகார் தெரிவிக்க வேண்டுமென்றால் இந்நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1800-425-2911-க்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவை வழங்கும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் இந்நிறுவனத்திடமிருந்து இலவசமாகப் பெறும் எஸ்.டி. செட்டாப் பாக்ஸ்களை சந்தாதாரர்களுக்கு தொகை ஏதும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாக வழங்க வேண்டும். மேலும், சந்தாதாரர்களிடமிருந்து அரசு நிர்ணயம் செய்த சந்தா தொகைக்கு மேல் அதிக தொகை வசூல் செய்யக்கூடாது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அதிக தொகை வசூலிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது".

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x