Published : 21 Jul 2020 02:50 PM
Last Updated : 21 Jul 2020 02:50 PM

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு; ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் 

சென்னை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன்னைத் தொடர்படுத்திப் பேசியதற்காக ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார். இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்குப் பாலியல் வன்கொடுமை செய்தது, காணொலி வெளியிடுவதாக மிரட்டிய சம்பவங்களில் கைதானவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் தொடர்பிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசியிருந்தார். ஸ்டாலினின் இந்தப் பேச்சு தொலைக்காட்சியிலும், வார இதழ்களிலும் செய்தியாக வெளியானது.

பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்ந்து தன்னைத் தொடர்படுத்தி உண்மைக்குப் புறம்பான தகவலை ஸ்டாலின் பேசி வருவதால், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தன்னைப் பற்றி ஸ்டாலின் பேசுவதற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்துள்ள இந்த வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மருமகன் வி.சபரீசன், தனியார் தொலைக்காட்சி, வார இதழ்களின் ஆசிரியர் கோபால், ஆசிரியர் அறிவழகன் ஆகியோர் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டு, இவர்களுக்கு எதிராக கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x