

கோவையில் கரோனா வைரஸ் தொற்று வேகமாய்ப் பரவும் நிலையில், பல்வேறு நிறுவன உரிமையாளர்கள், கடைக்காரர்கள் தாமாக முன்வந்து கடைகள், நிறுவனங்களை மூடி வருகின்றனர்.
கோவையில் ஏறத்தாழ 1,200-க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தினமும் புதிதாக 120-க்கும் மேற்பட்டார் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றனர். இதனால் மக்கள் வெளியில் செல்லவே அஞ்சும் சூழல் உருவாகியுள்ளது. கோவையில் சிறு, குறு தங்க நகைப் பட்டறைகள் மூடப்பட்டுள்ளன.
இதுகுறித்து கோவை பொற்கொல்லர்கள் சங்கத் தலைவர் எஸ்.எம்.கமலஹாசன் கூறும்போது, "கோவையில் 25,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு நகைப்பட்டறைகளை, நாங்களாகவே முன்வந்து அடைத்துள்ளோம். நிலைமை ஓரளவுக்குச் சீரடைந்த பின்னர், தொழிலைத் தொடங்குவோம்" என்றார்.
கோவையின் பிரபல ஜவுளிக் கடையான ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சிவகணேஷ் கூறும்போது, "மக்களின் ஆரோக்கியத்தையும், தொழிலாளர்களின் உடல் நலனையும் கருத்தில் கொண்டு, கரோனா வைரஸ் தாக்கம் குறையும்வரை கடையைத் தற்காலிகமாக மூடுகிறோம். நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் இன்று முதல் எங்களது ஜவுளிக் கடையை மூடுகிறோம்.
இது எங்களது தன்னிச்சையான முடிவு. நிறுவனத்தில் 600 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த ஊரடங்கு காலத்தின்போது வழங்கியதுபோல தற்போதும் ஊதியம் வழங்கப்படும். கரோனா நிவாரணத்துக்காக ரூ.1 கோடி நிதியை வழங்கியுள்ளோம். மேலும், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் ஒரு லட்சம் பேருக்கு, ஊரடங்கு காலத்தில் 40 நாட்களுக்கு உணவு வழங்கினோம். 10,000-க்கும் மேற்பட்ட முகக் கவசங்களையும் இலவசமாகவே வழங்கினோம்" என்றார்.
இதேபோல, பல்வேறு தொழில், வணிக நிறுவனங்கள், கடைகளும் தாமாக முன்வந்து கடைகளை மூடும் அறிவிப்பை வெளியிடத் தொடங்கியுள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் மிகக் குறைந்த அளவு ஆட்களைக் கொண்டே செயல்படுவது குறிப்பிடத்தக்கது.