Last Updated : 20 Jul, 2020 01:02 PM

 

Published : 20 Jul 2020 01:02 PM
Last Updated : 20 Jul 2020 01:02 PM

கிரண்பேடியும், நாராயணசாமியும் இரவு தொடங்கி காலை வரை தொடர் கடிதம்; ஆளுநர் உரையின்றி புதுச்சேரி சட்டப்பேரவை தொடக்கம்

புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாகத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், முதல்வர் நாராயணசாமியும் நேற்று இரவு முதல் தொடர்ந்து இன்று காலை வரை தொடர்ந்து கடிதம் அனுப்பிக் கொண்டனர். சட்டப்பேரவைக்குக் கிரண்பேடி வராததால் ஆளுநர் உரையின்றி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

புதுவை சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 30-ம் தேதி அரசின் 3 மாத செலவினங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 42 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இடைக்கால பட்ஜெட்டிற்கான காலக்கெடு ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய புதுச்சேரி அரசு முடிவெடுத்தது. இதற்காக ரூ.9 ஆயிரத்து 500 கோடிக்கு பட்ஜெட் மதிப்பீடு செய்து, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஊரடங்கால் மாநில வருவாய்க் குறைவைச் சுட்டிக்காட்டி, மதிப்பீட்டைக் குறைத்து அனுப்பும்படி மத்திய அரசு அறிவுறுத்தியது.

இதனையடுத்து புதுவை அரசு ரூ.9 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் மதிப்பீடு செய்து மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைத்தது. ஆனால் இதற்கு உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை. முதல்வர் நாராயணசாமி மத்திய அரசு அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தொடர்ந்து பேசி வந்தார். நீண்ட இழுபறிக்குப் பின்னர் புதுவை அரசின் பட்ஜெட்டிற்கு மத்திய அரசு எழுத்துபூர்வமாக ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடர்ந்து ஆடி அமாவாசை நாளான இன்று பட்ஜெட் தாக்கலாகும் என்று அறிவிக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு ஆளுநர் கிரண்பேடி உரையாற்றி பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடங்கி வைத்தவுடன் மதியம் 12 மணிக்கு முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செயவார் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் நேற்று இரவு ஆளுநர் உரை சட்டப்பேரவையில் இடம் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டு முதல்வர், அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் நேற்று இரவு ஆலோசனை நடத்திவிட்டுப் புறப்பட்டனர்.

அதையடுத்து இரவு 11 மணியளவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது வாட்ஸ்அப்பில் முதல்வர் நாராயணசாமிக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார். அதில், "ஆளுநர் உரை தொடர்பான நகலைக் காலதாமதமாக எனக்கு அனுப்பி உள்ளீர்கள். மானியக் கோரிக்கை தொடர்பான விவரங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை. யூனியன் பிரதேசச் சட்டத்தின் அடிப்படையில் விவரங்களைச் சமர்ப்பித்து இருக்க வேண்டும். ஆகவே, மானியக் கோரிக்கை தொடர்பான விவரங்களைச் சமர்ப்பித்த பின்னர் வேறொரு புதிய தேதியில் ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட் தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், துணைநிலை ஆளுநர் மாளிகையில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தை முதல்வர் அலுவலகம் ஊழியர்கள் மற்றும் இல்லத்தில் இருப்பவர்கள் வாங்க மறுத்துள்ளதால் இது தொடர்பாக மத்திய உள்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளேன் என்றும் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு முதல்வர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநருக்குக் கடிதம் அனுப்பினார். அதில், "புதுச்சேரி சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடருக்கும், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்திய அரசியல் சட்டப்படி ஆளுநர் உரையாற்றுவார் என நம்புகிறேன். இடைக்கால பட்ஜெட்டுக்கான காலக்கெடு முடிந்து 20 நாட்கள் ஆகிவிட்டன. கரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்வது ஜனநாயக முறைப்படி கட்டாயம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து மீண்டும் காலை 9 மணியளவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமிக்குக் கடிதம் அனுப்பினார். அதில், "பட்ஜெட் முழு வடிவம் பெறாமல் சட்டப்பேரவையை ஏன் கூட்ட வேண்டும் என்று கேள்வி எழுகிறது. யூனியன் பிரதேசச் சட்டப்படி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் பெற்ற பிறகே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக, சரியான கோப்புகளை அனுப்பி ஒப்புதல் பெற்ற பின்பு வேறு ஒரு தேதியில் சட்டப்பேரவையைக் கூட்டினால் ஆளுநர் உரை நிகழ்த்தப்படும்" என்று தெரிவித்திருந்தார்.

இச்சூழலில் ஆளுநர் கிரண்பேடி சட்டப்பேரவைக்கு காலை 9.30 மணிக்கு வரவில்லை. அவருக்காகக் காத்திருந்து அவர் வராததால் காலை 9.44 மணிக்குப் பேரவை தொடங்கியது. கிரண்பேடி வராததால் ஆளுநர் உரை நிகழ்ச்சி நிரலை சபாநாயகர் சிவக்கொழுந்து ஒத்திவைத்தார். அதற்குப் பேரவை ஒப்புதல் தரப்பட்டது. அதைத் தொடர்ந்து சபாநாயகர் பேரவை நிகழ்வுகளை தற்காலிகமாக ஒத்திவைத்தார்.

இதையடுத்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் கூறுகையில், "பட்ஜெட்டைத் துணைநிலை ஆளுநர் பார்க்க, ஒப்புதல் தராத சுவாரசியமான விஷயம் புதுச்சேரியில் நிகழ்கிறது. அதேநேரத்தில் அறங்காவலர்கள் இது தொடர்பாகவும், பட்ஜெட் வடிவமைப்பு தொடர்பாகவும் கலந்துரையாட உள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x