Published : 20 Jul 2020 08:06 AM
Last Updated : 20 Jul 2020 08:06 AM

வரியியல் அறிஞர் ராஜரத்தினம் மறைவு: தி.க. தலைவர் கி.வீரமணி இரங்கல்

ராஜரத்தினம்

சென்னை,

இந்தியாவின் தலைசிறந்த வரியியல் அறிஞரும், வருமான வரித்துறை முன்னாள் ஆணையருமான ராஜரத்தினம் (வயது 92) சென்னையில் 18-ம் தேதி காலமானார்.

ஐ.ஆர்.எஸ். அதிகாரியான ராஜரத்தினம், 1928-ம் ஆண்டில் விருதுநகரில் பிறந்தார். பொருளாதாரம் மற்றும் வணிக சட்டம்பாடத்தில் முதுநிலை பட்டங்கள்பெற்றார். வருமான வரித்துறையில் வருமானவரி அதிகாரியாக, உதவி ஆணையராக, ஆணையராக, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய உறுப்பினராக என பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தார்.

அத்துறை சார்ந்த தம் நீண்ட அனுபவங்களை நூல்கள் வாயிலாகவும், கருத்தரங்குகள் வழியாகவும் சமூகத்துக்கு வழங்கினார். இளம் ஆடிட்டர்கள், அதிகாரிகளுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார். அவரது மறைவு அத்துறையில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

1985-ம் ஆண்டு ஓய்வுபெற்ற ராஜரத்தினம் எழுதிய டாக்ஸ் மேனேஜ்மெண்ட், லேண்ட்மார்க் கேசஸ் முதலான நூல்கள் வரியியல் துறையில் வழிகாட்டும் துருவ நட்சத்திரங்களாகத் திகழ்கின்றன. தம் அனுபவங்களை நாள், வார, மாத இதழ்களில் அவர் தொடர்ந்து எழுதிவந்தார்.

அவரது மறைவையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், “பெரியார் அறக்கட்டளையின் தலைவர், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர், நமக்கு எப்போதும் வழிகாட்டி அறிவுரை வழங்கும் நேரிய பண்பாளராக இருந்தவர் ராஜரத்தினம். மனிதநேயத்தோடு எவரிடமும் பழகும்பழுத்த நேர்மையாளர். அவரது மறைவு நமக்கும், நமது கொள்கைக் குடும்பத்தினருக்கும், அவர் குடும்பத்தினரைப் போலவே ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x