Last Updated : 16 Sep, 2015 03:07 PM

 

Published : 16 Sep 2015 03:07 PM
Last Updated : 16 Sep 2015 03:07 PM

மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர் யார்?- புதுச்சேரி ஆளுங்கட்சியில் குழப்பம் நீடிப்பு

மாநிலங்களவை தேர்தலையொட்டி புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. 40 நிமிடங்கள் நடந்த இக்கூட்டத்தில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

உரிய நேரத்தில் முடிவு தெரிவிக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். அரசு கொறடா பதவியை ராஜிநாமா செய்த நேரு இக்கூட்டத்தை புறக்கணித்தார்.

புதுச்சேரியில் கடந்த முறை மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கண்ணன் வென்று எம்பியானார். அவரது பதவிக்காலம் வரும் அக்டோபர் 6-ம் தேதி முடிவடைய உள்ளது. வேட்பு மனுதாக்கல் தற்போது நடந்து வருகிறது. மனுதாக்கல் செய்ய செப்டம்பர் 18-ம் தேதி கடைசி நாளாகும். அடுத்தநாளான 19-ல் மனு பரிசீலனை நடக்கும். 21ம் தேதி மனுவை திரும்ப பெற கடைசி நாள். வரும் 28-ம் தேதி சட்டப்பேரவை வளாகத்தில் காலை 9 முதல் 4 வரை தேர்தலும், அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கையும் முடிவும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மாநிலங்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டும் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் வேட்பாளர் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. மேலும் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்படவில்லை என்று குற்றம் சாட்டி அக்கட்சியின் அரசு கொறடா நேரு எம்எல்ஏ நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனிடையே நேற்று மாலை முதல்வர் ரங்கசாமி பொள்ளாச்சியில் வேட்டைக்காரன் புதூரில் உள்ள அழுக்குசாமி கோயிலுக்கு புறப்பட்டு சென்றார். சட்டப்பேரவை வளாகத்தில் ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கூடி இரவு பேசினர். அதையடுத்து புதன்கிழமையன்று ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தைகூட்டுமாறு முதல்வர் தெரிவித்ததாக கட்சி பொதுச்செயலர் பாலன் தெரிவித்தார்.

இதையடுத்து இன்று (புதன்கிழமை) காலை தனியார் உணவு விடுதியில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தை அரசு கொறடா பதவியை ராஜிநாமா செய்த எம்எல்ஏ நேரு பங்கேற்காமல் புறக்கணித்தார். உடல் நிலை காரணமாக அமைச்சர் சந்திரகாசு பங்கேற்கவில்லை. இதர எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

பகல் 12 மணிக்கு முதல்வர் ரங்கசாமி வந்தார். அதையடுத்து கூட்டம் தொடங்கியது. இக்கூட்டம் 40 நிமிடங்கள் நடந்தது. ஆனால், முடிவு எட்டப்படவில்லை. கூட்டம் முடிந்த பிறகு முதல்வர் ரங்கசாமி கூறுகையில், "மாநிலங்களவை எம்பி வேட்பாளர் தொடர்பாக உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்." என்று தெரிவித்தார்.

வேட்பு மனுதாக்கல் செய்ய ஒரு நாள் மட்டுமே உள்ளதாக கேட்டதற்கும், வேறு கேள்விகளுக்கும் இதே பதிலையே தெரிவித்தார்.

இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்களாக கருதப்படும் வைத்தியநாதன், கல்யாணசுந்தரம், கார்த்திகேயன், அங்காளன் ஆகியோர் தனியாக ஹோட்டலின் தரைத்தளத்துக்கு வந்து பேசிக்கொண்டிருந்தனர்.

பின்னர் 3-வதுதளத்துக்குசென்று தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியப்படி இருந்தனர். இதர எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். முதல்வர் ரங்கசாமி கீழ் தளத்துக்கு வந்து அங்கு காத்திருந்த சபாநாயகர் சபாபதியிடம் பேசிவிட்டு புறப்பட்டு சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x