Last Updated : 18 Jul, 2020 12:15 PM

 

Published : 18 Jul 2020 12:15 PM
Last Updated : 18 Jul 2020 12:15 PM

இனி மாவட்டப் பிரிப்பு இல்லை என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்க: முதல்வருக்குக் கும்பகோணம் மக்கள் கோரிக்கை

கும்பகோணம்

“தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்பட மாட்டாது” என்ற முதல்வரின் அறிவிப்பு, தனி மாவட்டம் கோரிப் போராடிக்கொண்டிருக்கும் கும்பகோணம் பகுதி மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய கும்பகோணம் வருவாய்க் கோட்டத்தைத் தஞ்சை மாவட்டத்திலிருந்து பிரித்துத் தனி மாவட்டமாக்க வேண்டும் என்பது கும்பகோணம் மக்களின் 30 ஆண்டு காலக் கோரிக்கை. அண்மையில், மயிலாடுதுறையைத் தலைமையாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு கும்பகோணம் மக்களும் தங்களது கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

‘இல்லந்தோறும் கோலம்... உள்ளந்தோறும் மாவட்டம்’- ‘வேண்டும் கும்பகோணம் மாவட்டம்’ என்றெல்லாம் வீடுதோறும் வாசலில் கோலமிட்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து முதல்வருக்கு 5 லட்சம் தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டத்தையும் தற்போது நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தபால் அட்டைகளை அனுப்பியுள்ளனர். இதனிடையே நேற்று, கும்பகோணம் கோட்டத்தில் முழு அடைப்பும் நடத்தி தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.

நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், ஈரோட்டில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது” என்று உறுதிபடத் தெரிவித்துவிட்டார். முதல்வரின் இந்த அறிவிப்பு கும்பகோணம் மாவட்டம் கேட்டுப் போராடும் மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்துக் கும்பகோணம் அனைத்து வணிகர் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வி.சத்தியநாராயணன் ‘இந்து தமிழ்’ இணையத்திடம் பேசுகையில், “கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக்க வேண்டும் என்பது ஏதோ இப்போது புதிதாக எழுந்துள்ள கோரிக்கையல்ல; 30 வருடக் கோரிக்கை. இதை வலியுறுத்திப் போராட்டங்கள் நடக்கும்போதெல்லாம் அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும். அதனால் அவ்வப்போது போராட்டத்தைக் கைவிட்டு அமைதி காத்தோம்.

2011-ம் ஆண்டு தற்போதைய வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சட்டப்பேரவையில் இக்கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார். கடந்த ஆண்டு தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டபோது அதற்கு நன்றி தெரிவித்து சட்டப்பேரவையில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், ‘விரைவில் தஞ்சையிலிருந்து பிரித்து கும்பகோணம் தனி மாவட்டமாக்கப்படும்’ என்று அறிவித்தார். அதனால் நாங்கள் அமைதியுடன் இருந்தோம். ஆனால் இதுநாள் வரை அதற்கான நடவடிக்கைகள் எதுவும் தொடங்கப்படவில்லை என்பதால்தான் நாங்கள் அனைத்துக் கட்சியினர், அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரோடும் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம்.

கும்பகோணம் மாவட்டம் அமைக்கப்பட்டால் அதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை தவிர புதிதாக எந்தக் கட்டமைப்பு வசதிகளையும் செய்ய வேண்டியதில்லை. எல்லாமே இயல்பாகவே இங்கு அமைந்திருக்கிறது. பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் தலைமை அலுவலகங்களும் கும்பகோணத்தில்தான் அமைந்துள்ளன. அதனால் புதிதாக எந்த வசதிகளையும் ஏற்படுத்தத் தேவையில்லை.

அப்படி இருக்கும்போது தமிழக முதல்வர், ‘வருவாய்த்துறை அமைச்சர் முன்பே அறிவித்தபடி கும்பகோணம் மாவட்டத்தைத் தவிர இனி புதிதாக எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது’ என்றுதான் அறிவித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என்று கூறியிருப்பது எங்கள் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது போல அமைந்திருக்கிறது. அதுவும் ஒட்டுமொத்தமாகக் கடையடைப்பு செய்து போராடிக் கொண்டிருக்கும்போது அவர் இதைச் சொல்லியிருப்பது நல்லதல்ல.

மறுநாளோ, அல்லது போராட்டத்துக்கு முன்போ கூட இதைச் சொல்லியிருக்கலாம். மாறாக, போராட்டம் நடக்கும்போது சொல்லியிருப்பது எங்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது போலிருக்கிறது. கோரிக்கை ஆரம்பமான காலகட்டத்தில் இப்படி உறுதியான பதிலைச் சொல்லியிருந்தால் மக்கள் மாவட்டம் உருவாகச் சாத்தியமில்லை என்று கருதி அமைதியாக இருந்திருப்பார்கள். ஆனால், விரைவில் அமைக்கப்படும் என்பதுபோலச் சொல்லிச் சொல்லி மக்களின் மனதில் தனி மாவட்ட ஆசையை நீரூற்றி வளர்த்துவிட்டு இப்போது திடீரென நெருப்பை அள்ளிக் கொட்டுகிறார்கள்.

எனவே, முதல்வர் இதையெல்லாம் மனதில் கொண்டும், மக்களின் கோரிக்கையை ஏற்றும் இனி மாவட்டம் பிரிக்கப்படாது என்ற அவரது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கும்பகோணம் மாவட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பது கும்பகோணம் கோட்டத்தைச் சேர்ந்த மக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோள்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x