

வைரஸ் காய்ச்சலுக்குப் பயந்து 120 நாட்களைக் கடந்தும் 120 கோடி மக்களை வீட்டுக் காவலில் வைப்பது சரியான நடவடிக்கையாகத் தெரியவில்லை எனக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ’இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய அவர், ‘பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2003’ காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம். இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும் போது மக்களைத் தாமதமின்றி பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தச் சட்டத்தின் 23-வது பிரிவைப் பயன்படுத்தித்தான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் 144 தடையுத்தரவு போட்டு வைத்திருக்கிறது மத்திய அரசு. மறைமுகமாக இதுவும் ஒரு நெருக்கடி நிலைதான் என நான் சொன்னால் ஆட்சியாளர்களுக்குக் கோபம் வரும். ஆனால், உண்மை அதுதான்.
இந்திரா காந்தி காலத்தில், அவசர காலச் சட்டப் பிரிவுகள் 358 மற்றும் 360-ஐப் பயன்படுத்தும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டது. அந்த சமயத்தில் ஆங்காங்கே உள்ளூர்த் தலைவர்களின் தலையீட்டால் இந்திரா காந்திக்குத் தெரியாமலேயே விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன. ஆனால், அந்த சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்தாமலேயே நெருக்கடி நிலை காலத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. ஒரு பக்கம் மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துவிட்டு இன்னொரு பக்கம் எதிர்ப்பு சக்திகளைத் தந்திரமாக ஒடுக்கும் வேலையையும் பிசிறு தட்டாமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
பேரிடர் மேலாண்மை அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சர்தான் தலைவர். அவருக்குக் கீழே தலைமைச் செயலாளர் அந்தஸ்திலான ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் இருப்பார். அவருக்குக் கீழே பதினைந்துக்கும் மேற்பட்ட துறை வல்லுநர்கள் இருப்பார்கள். பேரிடர்க் காலங்களில் ராணுவம், கப்பற்படை, விமானப்படை உள்பட அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் அதிகாரம் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு வழங்கப்படும். சென்னை புயல் வெள்ளத்தில் செம்பரம்பாக்கம் ஏரி உடைபட்டுப் பேரழிவு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. பாஜக ஆட்சிக்கு வந்த புதிது என்பதால் அந்த சமயத்தில் அந்த சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் நான் நினைவுபடுத்திப் பேசினேன். ‘உள்துறை அமைச்சர் உடனே உத்தரவிட்டால்தான் மூழ்கிக் கொண்டிருக்கும் சென்னையைக் காப்பாற்ற முடியும்’ என்று நான் பேசிய சில மணி நேரத்தில் ராணுவம் களத்துக்கு வந்தது.
அந்த நேரத்தில் அத்தகைய நடவடிக்கை தேவைதான் ஆனால், இப்போது ஒரு வைரஸ் காய்ச்சலுக்குப் பயந்து ஒட்டுமொத்த தேசத்தையும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தைப் பயன்படுத்தி முடக்கிவைப்பது சரியான நடவடிக்கையாகத் தெரியவில்லை. இந்தப் பொது முடக்கத்தால் இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் கூடுதலாக இரண்டு கோடி குழந்தைகள் பிறக்கப் போவதாகச் சொல்கிறார்கள். இதுதான் கரோனா நமக்குக் கைமேல் தந்திருக்கும் பலன்.
இந்தியாவில் காச நோயால் தினமும் ஆயிரக்கணக்கானோர் இறக்கிறார்கள். ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட பிரச்சினைகளால் இறப்பவர்களும் ஏராளம். இவர்களுக்கெல்லாம் இப்போது மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்கவில்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் கரோனா பயம் காட்டுகிறார்கள். மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காமல் மறுக்கப்படுவது கூட அவர்களின் உரிமையைப் பறிப்பதற்குச் சமம்தான்.
ஜலதோஷம் பிடித்தால் ஏழு நாட்கள் இருக்கும். அதுபோல கரோனாவின் தாக்கம் 15 நாட்களுக்கு இருக்கும். உடம்பில் வேறு எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்களுக்கு கரோனா எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. 15 நாட்கள் உடம்பில் இருந்துவிட்டு அதுவே அழிந்து விடுகிறது. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட சீரியஸான பிரச்சினைகள் இருப்பவர்களைத்தான் கவனித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது.
டெல்லியில் குடிசைப் பகுதிகள் தவிர மற்ற இடங்களில் எல்லாம் இப்போது கரோனா கட்டுக்குள் வந்து, சகஜ நிலை திரும்பி விட்டதாகவே எனக்குத் தெரிகிறது. இனியும் கரோனாவுக்காக பொதுமுடக்கத்தை நீட்டித்துக் கொண்டே போனால் எங்களால் சமாளிக்க முடியாது என்று பிரதமருக்குத் தொழில் துறையினர் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். எனவே, இனியும் மக்களை வீட்டுக்குள் முடக்கிவைக்காமல் அவர்களை உரிய பாதுகாப்புடன் சுதந்திரமாக நடமாட விடுங்கள்” என்றார்.