Published : 17 Jul 2020 07:24 AM
Last Updated : 17 Jul 2020 07:24 AM

கரோனா பரவல் அதிகரித்திருந்தாலும் கோவையில் முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவையில் மீண்டும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை மாநகராட்சிப் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்ய ரோபோடிக் இயந்திரம் கடந்த ஆண்டு இறுதிமுதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தினர், தனது சிஎஸ்ஆர் நிதியின் மூலம் ரூ.2.12 கோடி மதிப்பில் மேலும் 5 ரோபோடிக் இயந்திரங்களை, மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்வில், இந்த 5 ரோபோடிக் 2.0 இயந்திரங்களை மாநகராட்சியின் பயன்பாட்டுக்காக, உள்ளாட் சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். மேலும், கரோனா நோய் தடுப்புப் பணிகள் தொடர்பான மாநகராட்சியின் விழிப்புணர்வு பிரத்யேக செயலியையும் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, கரோனா நோய் தடுப்புப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின்பு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறும்போது,‘‘கோவையில் கரோனா வைரஸ் பரவலின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் உயிரிழப்பு சதவீதம் குறைவாக உள்ளது. கரோனா பரவலைத் தடுக்க கோவையில் 5 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, மாநகரில் தினசரி 100, ஊரகப் பகுதிகளில் தினசரி 58 முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முறையிலும் நேற்று முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவையில் இதுவரை 80,623 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு, 1,591 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 930 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். 650 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்றுக் குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க 4,813 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாளையார் சோதனைச் சாவடியில் தினசரி 250 பேருக்கு கரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரோனா பரிசோதனை முடிவுகளை தாமதமின்றி வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையில் கரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்திருந்தாலும், நிலைமை கட்டுக்குள் உள்ளது. எனவே முழு ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை’’ என்றார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங், மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x