Published : 14 Jul 2020 16:07 pm

Updated : 14 Jul 2020 16:07 pm

 

Published : 14 Jul 2020 04:07 PM
Last Updated : 14 Jul 2020 04:07 PM

மருத்துவக் கல்விக்கான மத்திய தொகுப்பு இடங்களுக்கு வளர்ந்த மாநிலங்கள் தங்கள் கோட்டாவைக் கொடுப்பது தேவையா? சட்டப்படி சரியா? - கி.வீரமணி கேள்வி

k-veeramani-on-reservation
கி.வீரமணி: கோப்புப்படம்

சென்னை

மருத்துவக் கல்விக்கான மத்திய தொகுப்புக்கு இடங்களுக்கு வளர்ந்த மாநிலங்கள் தங்கள் கோட்டாவைக் கொடுப்பது தேவையா? சட்டப்படி சரியா? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (ஜூலை 14) வெளியிட்ட அறிக்கை:

"மருத்துவக் கல்விக்கான இடங்களில் மத்திய தொகுப்புக்கு இளநிலை (எம்பிபிஎஸ்) பட்டப் படிப்புக்கு 15 விழுக்காடும், முதுநிலை மேற்பட்டப் படிப்புக்கு 50 விழுக்காடும் இடங்களை மாநில அரசுகள் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் ஆணையைச் செயல்படுத்தி வரும் நிலையில், நீட் தேர்வு என்ற ஓர் அகில இந்திய பொதுத் தேர்வு முறை புகுத்தப்பட்ட பிறகு அவர்களே உருவாக்கிய 2010 இல் தொடங்கி 2018 வரை உள்ள பல விதிகளின்படி, எஸ்.சி., எஸ்.டி.,க்கு மத்திய அரசின் விதிப்படி முறையே 15 சதவிகிதம், 7.5 சதவிகிதம் ஒதுக்கிய நிலையிலும், ஓ.பி.சி. என்று அழைக்கப்படும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒரே ஓர் இடம்கூட மாநிலங்களுக்கு ஒதுக்கப்படாததால், இதுவரை 10 ஆயிரம் மருத்துவக் கல்வி இடங்களை பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்துள்ளார்கள் என்பது, எத்தனை அநீதி - கொடுமை? சமூகநீதி மண்ணான தமிழ்நாடுதான் இதற்குரிய பரிகாரம் காணவேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அத்துணை இயக்கங்களும், திராவிடர் கழகம் எடுத்து வைத்த வாதங்களை ஏற்று, சமூகநீதி வேண்டி சமூகநீதிக் களத்தில் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன!

உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் இது சம்பந்தமான பொதுநல வழக்குகளும், பாதிக்கப்பட்ட தனியாரின் வழக்கும் நிலுவையில் உள்ளன

அரசியல் சட்டப் பீடிகை கூறுவது என்ன?

சமூகநீதி என்பது அரசியல் சட்டத்தின் பீடிகையில் (Preamble) நீதி என்று தொடங்கும்போது சமூக, பொருளாதார, அரசியல் நீதி என்று குறிப்பிடுகையில், முன்னுரிமையை சமூகநீதிக்கே வழங்கியுள்ளது என்பதும், அந்தப் பீடிகையும் அரசமைப்புச் சட்டத்தின் (மாற்றப்பட முடியாத- கூடாத) அடிக்கட்டுமானத்தின் (Basic Structure of the Constitution) முக்கியப் பகுதி என்பதும், உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தீர்ப்புகளின்மூலம் உறுதிப்படுத்தப்பட்ட உண்மையாகும்!

கேசவானந்த பாரதி, Excel Wear Vs Union of India வழக்குகள் போன்றவற்றில் உறுதி செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றம்தான் ஜனநாயகத்தில் மக்களின் கடைசி நம்பிக்கை, நியாயத்தைப் பெறுவதில் அங்கேயே ஏமாற்றம் ஏற்படலாமா?
மக்கள்தொகையில் பெரும்பான்மை வாக்கு வங்கியிலும் பெரும்பான்மை என்று உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகம் (ஓபிசி) இப்பிரச்சினையில் வஞ்சிக்கப்பட்டு, உயர்சாதியினருக்கே பெரிதும் பலன் அளிக்கும் வகையில் நீதிப்போக்கு இருப்பது எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றே!

முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும், (ஏற்கெனவே இவர் தமிழ்நாடு அரசின் சட்டத் துறை செயலாளராகவும் பணியாற்றி, பிறகு உயர் நீதிமன்றத்திற்குச் சென்ற, பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு எழுதியவர்) சட்ட நிபுணருமான நீதிபதி ஏ.கே.ராஜன் எல்.எல்.டி. ‘Penalty for Progress?’ என்ற தலைப்பில், 'All India Quota in Medical Colleges' என்ற ஒரு புதிய நூல் ஒன்றை எழுதியுள்ளார். சில நாள்களுக்குமுன் அந்நூல் வெளிவந்துள்ளது. அதில் இப்பிரச்சினை குறித்து சட்ட வரலாற்றைத் துல்லியமாகவும், துணிவாகவும் பல அரசியல் சட்ட விதிகளை நுண்மா நுழைபுலத்தோடு சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தின் சில தீர்ப்புகளும், சில தீர்வுகளும் எப்படி விசித்திரமாகவும், விநோதமாகவும் அமைந்துள்ளன என்பதை அரசியல் சட்ட ரீதியாக விளக்கியுள்ளார்.

முன்னேறிய மாநிலங்களுக்கு அபராதமா?

இந்திய அரசு ஒரு கூட்டரசு (Federal); எனவே, மாநிலங்களின் உரிமைகள் மிக முக்கியமாகும் என்பதைச் சுட்டிக்காட்டி,
வளர்ந்த, முன்னேறிய மாநிலங்களுக்கு அபராதம் போடுவதுபோன்ற மத்திய அரசு நடவடிக்கைகளும், உச்ச நீதிமன்றத்தின் சில அரசியல் சட்ட விதிகளுக்கு முரணான தீர்ப்புகளும் விசித்திரமாக அமைந்ததன் விளைவுதான் மத்திய அரசுக்கு மாநில அரசுகளின் மருத்துவக் கல்வி இடங்கள் கோட்டாவும், சமூகநீதியைப் புறந்தள்ளி, தற்போது நடந்துள்ள அரசியல் சட்ட விரோதப்போக்கும் ஆகும் என்பதை அந்நூலில் பல தீர்ப்புகள் மூலமும், அரசியல் சட்ட விதிகளின் மூலமும் சுட்டி விளக்கியுள்ளார்!

மத்திய ஒதுக்கீடு என்பது உருவான வரலாறு என்ன? அந்நூலில் அதனைத் தெளிவாக விளக்குகிறார்.
தமிழ்நாடு அரசு போன்ற மாநிலங்கள், தங்கள் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி, வளர்ச்சியுறுவதைப்போல, வடக்கு, வடகிழக்குப் பகுதி மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகள் முன்பு அதிகம் இல்லாததால், வட இந்தியாவில் தாங்கள் விரும்பும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் அப்போது நீதிமன்றங்களை நாடினர்.
1983 இல் பிரதீப் ஜெயின் என்பவர் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில், அரசியல் சட்ட 32 ஆவது விதியின்கீழ் ஒரு வழக்குத் தொடர்ந்தார். (அந்த ரிட் மனுவில் அவர் அடிப்படை உரிமை (Fundamental Rights) எதுவும் கோரவில்லை). உச்ச நீதிமன்றம் அதனை விசாரணைக்கு ஏற்று அனைத்து மாநிலங்களுக்கும் பதில் அளிக்குமாறு தாக்கீதுகள் அனுப்பியது. (இதே அடிப்படையில்தான் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டபோது, அதை உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்க மறுத்து, உயர் நீதிமன்றத்திற்கே சென்று வழக்குத் தொடருங்கள் என்று கூறியது ஏன் என்பது சாமானிய குடிமக்களுக்குப் புரியவில்லை)

பிரதீப் ஜெயின் வழக்கில் குறிப்பிட்ட மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளைத் திறக்காதது ஏன்?

'சுதந்திரம் அடைந்து, பல பத்தாண்டுகள் கடந்த பிறகும், அந்த குறிப்பிட்ட மாநிலங்களில் சுகாதார அடிக்கட்டுமான வசதிகளைப் பெருக்கி, போர்க்கால அடிப்படையில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்கவேண்டும் என்று தீர்ப்பில் ஆணையிடுவதற்குப் பதிலாக, மற்ற வளர்ந்த மாநிலங்களிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களை மத்திய அரசு தொகுப்புக்கு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது, விசித்திரமானதாகும்.
அடுத்து மற்றொரு முக்கிய தகவல் என்னவென்றால்,
இந்த வழக்குக்குத் தொடர்பே இல்லாத தனிப்பட்டவர்களிடமிருந்து அடுத்த ஆண்டு (1984) முதல் விளக்கம் கேட்கும் மனுக்களை (Clarification Petitions) 2007 வரை, உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அவ்வப்போது பல விளக்கங்களை அளித்து வந்துள்ளது. இந்த நடைமுறையால், மத்திய அரசுத் தொகுப்புக்கு மாநில அரசுகள் வழங்க வேண்டிய முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை 25-லிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.
இதில் தெளிவாக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கிய சட்டப் பிரச்சினைக்கான விளக்கமும் முக்கியமாகும்.
மேற்காட்டப்பட்ட அத்துணை ஆணைகளும் இந்திய அரசியல் சட்டத்தின் 142 ஆவது பிரிவில் வழங்கப்படும் அதிகாரத்தின்கீழ் வருகிறது.

அரசியல் சட்டம் 142 ஆம் பிரிவு என்ன கூறுகிறது?

அரசியல் சட்ட 142 ஆவது பிரிவின் கீழ் பிறப்பிக்கப்படும் எந்த ஓர் ஆணையும், தீர்ப்பும் அப்பொருள்பற்றிய சட்டம் ஒன்று, நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும்வரை தற்காலிகமானதாகவே இருப்பவையே ஆகும்.
அதன் பின், இந்திய மருத்துவக் கல்விச் சட்டத்தைத் திருத்தி மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை நாடாளுமன்றம் நிர்ணயம் செய்தது. அதனைத் தொடர்ந்து தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் ஒன்றும் நாடாளு மன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குப் பணிகளை மேற்கொள்ள நான்கு குழுக்களை இந்த ஆணையச் சட்டம் உருவாக்கியது.
இந்த ஏற்பாட்டுக்குப் பிறகும், மத்தியத் தொகுப்புக்கு மருத்துவக் கல்லூரி மாணவர் இடங்களை மாநிலங்கள் வழங்க வேண்டியதன் பின்னணியில் உள்ள நியாயமும், அவற்றை மத்திய அரசு அகில இந்திய இட ஒதுக்கீடாக ஏற்கவேண்டிய தேவையும் முடிவுக்கு வந்துவிட்ட நிலைதானே இப்போது யதார்த்தமானது?

​​பிற்படுத்தப்பட்டவருக்குப் ஏமாற்றமா?

அதேபோல பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய ஏழை உயர்சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடுக்கு இதில் ஏற்பாடு செய்துள்ளார்கள். தனியாக ஒரு வழக்கு பாய்ந்த பிறகே, எஸ்.சி., எஸ்.டி., இட ஒதுக்கீடு முறையே 15%, 7.5% இட ஒதுக்கீடு செய்தனர். என்றாலும் அந்த மருத்துவ ஆணையமே ஒப்புக்கொண்ட அந்தந்த மாநில இட ஒதுக்கீட்டு சட்டப்படி ஓபிசி என்ற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் ஏமாற்றம் என்றால், பூஜ்ய இட ஒதுக்கீடு என்றால் அரசியல் சட்டம் முன்னுரிமை கொடுத்த சமூகநீதி இப்படி பறிக்கப்படுவது அநியாயம் அல்லவா? அநீதி அல்லவா?
மேலும் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு மருத்துவக் கல்விப் பிரச்சினைகளுக்கு பல அருமையான சட்ட விளக்க வெளிச்சம் தரும் நீதிபதி ஏ.கே.ராஜன் ஆங்கில நூலின் தமிழாக்கத்தினை தமிழ்கூறும் நல்லுலகம் ஆவலுடன் எதிர்நோக்குகிறது; அவருக்கு ஒடுக்கப்பட்டோர் சமூகங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கின்றன.
அவருடைய நூலில் சிறந்த ஒத்துழைப்புத் தந்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் ஏ.தியாகராஜன் நமது பாராட்டுக்குரியவர்!"

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

கி.வீரமணிதிராவிடர் கழகம்மருத்துவக் கல்விஇட ஒதுக்கீடுஅகில இந்திய தொகுப்புK veerananiDravidar kazhagamMedical educationResevationAll India quotePOLITICS

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author