Published : 10 Jul 2020 11:03 PM
Last Updated : 10 Jul 2020 11:03 PM

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி பல லட்சம் மோசடி: 3 பேர் கைது

போலி கால் சென்டர் நடத்தி பொதுமக்களிடம் பணத்தை பெற்று வேலை வாங்கித்தருவதாக, கடன் பெற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபட்ட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக ஒரு கும்பல் போலியான கால் சென்டர் மூலம் அப்பாவி மக்களை குறிவைத்து, இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், தனிநபர் கடன் பெற்று தருவதாகவும் கூறி முன்பணம் பெற்று ஏமாற்றி வருவதாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

மேற்படி புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை பிடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் மத்திய குற்றப்பிரிவிற்கு உத்தரவிட்டதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் அவர்கள் அறிவுரையின்பேரில், மத்திய குற்றப்பிரிவின், வங்கி மோசடி தடுப்புப்பிரிவில் தனிப்படை அமைக்கப்பட்டது.

மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் மேற்படி புகார்கள் மீது தீவிர விசாரணை மேற்கொண்டதில் பொதுமக்களிடம் தனிநபர் கடன் பெற்றுத் தருவதாக கூறி வந்த கும்பல் திருவான்மியூர் மற்றும் பெருங்குடியில் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அதனடிப்படையில், தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மேற்படி குற்றச்செயலில் ஈடுபட்ட சேலத்தை தியாகராஜன் (38), சைதாப்பேட்டையை சேர்ந்த கோபிநாத், (28), விழுப்புரத்தைச் சேர்ந்த மணிபாலா (220 ஆகிய 3 பேரை நேற்று (09.7.2020) கைது செய்தனர்.

விசாரணையில் குற்றவாளிகள் 3 பேரும் திருவான்மியூர், எல்.பி. சாலை மற்றும் பெருங்குடி ஆகிய 2 இடங்களில் போலியான கால் சென்டர் நடத்தி, பொதுமக்களிடம் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், எங்களது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுத்தால் தங்களுக்கு தனிநபர் கடன் பெற்று தருவதாகவும் அதற்கு முன்பணமாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணம் செலுத்த வேண்டும் என பொதுமக்களை தங்கள் வங்கிக்கணக்கில் பணத்தை போட வைத்துள்ளனர்.

பணத்தை போட்டவர்களிடம் கடன் பெற்றுத் தராமல் ஏமாற்றி வந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் குற்றவாளி தியாகராஜன் என்பவர் இதற்கு முன்பு சென்னை, அண்ணாசாலை, ராயலா டவர்சில் மிகப்பெரிய அளவில் போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்டு கைதான பள்ளிக்கரணையைச் சேர்ந்த செல்வா (எ) செல்வகுமார் என்பவரின் நெருங்கிய கூட்டாளி என்பது தெரியவந்தது.

மேற்படி குற்றவாளிகள் சில தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் தொடர்பு வைத்து, அவர்களுடைய பாலிசியை தருவதாக இளம் பெண்களை வைத்து, மோசடியாக பேசி அப்பாவி மக்களிடம் தனிநபர் கடன் பெற்று தருவதாக கூறி புகைப்படம் மற்றும் அரசு ஆவணங்களை பெற்று அவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி தனிநபர் கடன் பெற்றுத் தராமல் அப்பாவி மக்களின் சிறு சேமிப்பையும் தராமல் இந்த கரோனா காலத்திலும் ஏமாற்றி வந்துள்ளனர்.

விசாரணைக்குப் பின்னர் குற்றவாளிகள் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

2020-ம் ஆண்டில் மட்டும் இதுவரை போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவில் 365 புகார்கள் பெறப்பட்டு வழக்குப் பதிவு செய்து, 26 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு இன்றி இழந்த தொகை ரூ.1,60,00,000/- ஆகும்.

ஆகவே, பொதுமக்கள், செல்போனில் வரும் அழைப்புகளில் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி, தனிநபர் கடன் பெற்று தருவதாக பேசுபவர்களையும், தங்களது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் வேலிடிட்டி முடிவடைவதாகவும் கூறி, விவரங்களை பெற்று, OTP எண் மூலம் மோசடியில் ஈடுபடுபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபடுபவர்களிடமும் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு இதுபோன்ற போலியான அழைப்புகளை தவிர்க்க வேண்டும். யாருக்கும் செல்போனில் தங்களது வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டாம் எனவும் சென்னை பெருநகர காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x