Published : 17 Sep 2015 05:10 PM
Last Updated : 17 Sep 2015 05:10 PM

ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் பெண்களுக்கு தனி கவுன்ட்டர்கள்

ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் பெண்கள் மட்டும் 120 பேர் டிக்கெட் முன்பதிவு செய்ய வருவார்களேயானால் அந்த மையங்களில் பெண்களுக்கென தனி கவுன்ட்டர்களை அமைக்க வேண்டுமென ரயில்வே மண்டலங்களுக்கு ரயில் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக பெண்கள் நீண்ட நேரம் நின்று டிக்கெட் முன்பதிவு செய்ய அவதிப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, பெண் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனியாக கவுன்ட்டர்கள் அமைக்க வேண்டுமென கடந்த 2001-ம் ஆண்டில் உத்தரவிடப்பட்டது. ஆனால், இதை முழுமையாக ரயில்வே மண்டலங்கள் அமல்படுத்துவதில்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக ரயில்வே வாரியத்துக்கு பெண்களுக்கான அதிகார கமிட்டி கோரிக்கை அளித்துள்ளது. இந்நிலையில், டிக்கெட் முன்பதிவு மையங்களில் பெண்களுக்கு என தனி கவுன்ட்டர் திறக்க வேண்டுமென ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே வாரியம் ரயில்வே மண்டலங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: "ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் ஒரு ஷிப்ட்டில் பெண்கள் 120 பேர் டிக்கெட் முன்பதிவு செய்யும் அளவுக்கு தேவையிருந்தால், அந்த மையங்களில் பெண்களுக்கென தனி கவுன்ட்டர்களை அமைக்க வேண்டும். மேலும், ஒரு ஷிப்ட்டில் பெண்கள் 120க்கும் குறைவானோர் மட்டுமே முன்பதிவு செய்தால், அவர்களை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கலாம். பெண்களுக்கான தனி கவுன்ட்டர்கள் காலை 11.30 மணிக்கு பிறகே செயல்படும். பெண்களுக்கான ஒதுக்கப்படும் தனி கவுன்ட்டர்களில் பெண்கள் அவர்களை சார்ந்தவர்களுக்கு அல்லது மற்றவர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்து கொடுக்கலாம்" எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x