Published : 28 Jun 2020 06:29 PM
Last Updated : 28 Jun 2020 06:29 PM

சாத்தான்குளம் விவகாரம்; முகநூலில் சர்ச்சைப் பதிவு: ஆயுதப்படைக் காவலர் பணியிடைநீக்கம்

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் கடுமையாகத் தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தூத்துக்குடி மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைவரும் கோரிக்கை வைத்தனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது.

மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் எதிர்ப்பைக் காட்ட வணிகர்கள் கடையடைப்பை நடத்தினர். ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேசம் முழுவதும் பிரபலங்கள் இதை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை ஆயுதப்படை காவலர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் டேய் தம்பிகளா வாங்க, அடுத்த லாக்கெப் டெத்துக்கு ஆள் கிடைக்கலைன்னு பார்த்தோம், ஆள் கிடைச்சிருச்சு என போட்டு மிக அவதூறாக பதிவிட்டிருந்தார். எரியும் தீயில் எண்ணெய் ஊற்றிய கதையாக அவரது பதிவு இருந்தது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.

இதையடுத்து ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்துவை இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே தான் பதிவிடவில்லை என்றும், சாத்தான்குளம் சம்பவத்தில் மேலும் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக தனது முகநூலை யாரோ தவறாக பதிவிட்டுள்ளார்கள். ஆகவே எல்லோரும் என்னை உங்கள் சகோதரனாக நினைத்து மன்னிக்கவேண்டும் என சதீஷ் முத்து கோரியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x