Published : 22 Sep 2015 08:51 AM
Last Updated : 22 Sep 2015 08:51 AM

அரேபியர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கம்பம் இளைஞருக்கு கிட்டியது உதவிக்கரம்

அரேபியர்களிடம் இருந்து மீட்கப்பட்டாலும், நாடு திரும்ப விமான டிக்கெட் எடுக்க பணமின்றி குவைத்தில் தவித்து வந்த கம்பம் இளைஞர் சதாம் உசேனுக்கு உதவிக்கரம் கிட்டியது. இதையடுத்து அவர் சென்னை திரும்புகிறார்.

முன்னதாக அரேபியர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கம்பம் இளைஞர் நாடு திரும்ப விமான டிக்கெட் எடுக்க பணம் இல்லாமல் குவைத்தில் தவித்து வருவதாக தகவல் வெளியானது. அதை 'தி இந்து' செய்தியாக வெளியிட்டது.

தேனி மாவட்டம், கம்பம் தாத்தப்பன்குளம் பகுதியைச் சேர்ந்த இமாம்ஷா மகன் சதாம் உசேன்(26). குவைத்தில் வாகன ஓட்டுநர் பணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர், அங்கு ஒட்டகம் மேய்க்கும் தொழிலாளி யாக கொத்தடிமையாக நடத்தப் பட்டதாக புகார் எழுந்தது. இதுபற்றி அவர் வாட்ஸ்அப் மூலம் தனது நண்பர்களுக்கு அனுப்பிய தகவல் தமிழகம் முழுவதும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் முயற்சியால் சதாம் உசேன் மற்றும் அவரது பாஸ்போர்ட் அரபுக்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு, கடந்த 15-ம் தேதி அவரது சகோதரரிடம் ஒப்படைக் கப்பட்டது.

இதையடுத்து, அவர் செப். 21-ம் தேதி இந்தியா திரும்புவ தாகத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் வராததால் அவரது செல்பேசியை தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் ‘தி இந்து’விடம் கூறுகையில், அரபுக்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நான், எனது சகோதரரின் அறையில் அவரது முதலாளிக்கு தெரியாமல் தங்கியுள்ளேன். உணவுக்கு சிரமமாக உள்ளது. பாஸ்போர்ட் பெற்ற பின் குவைத்தில் இருக்கக் கூடாது என்பது சட்டம். ரூ.19 ஆயிரமாக இருந்த விமானக் கட்டணம் தற்போது பக்ரீத் பண்டிகை நெருங்குவதால் ரூ.30 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

நான் வேலை பார்த்த சம்பளமும், விசா எடுக்க கொடுத்த ரூ.1 லட்சமும் கிடைக்கவில்லை. இதனால் நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறேன்.

வறுமையின் காரணமாக எனது குடும்பத்தினரும் பணம் புரட்ட முடியாமல் கம்பத்தில் சிரமப்படுகின்றனர். நான் சட்டத் துக்குப் புறம்பாக இங்கு தங்கி இருப்பதாக என் மீது புகார் கொடுக்க அரபிகள் தயாராகி வருகின்றனர். அவ்வாறு புகார் கொடுக்கப்பட்டால் அந்நாட்டுக் காவல்துறையினர் என்னை கைது செய்து சிறையில் அடைத்து விடுவர். அதனால், நான் உடனடியாக இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். எனக்கு நாடு திரும்ப விமான டிக்கெட் எடுத்து இணை யதளம் வழியாகவோ அல்லது பணமோ எனக்கு அனுப்பி வைத்தால் நான் இந்தியா வந்துவிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

இந்தச் செய்தியில் இடம்பெற்ற சதாம் உசேனின் தொலைபேசி எண்: 0096555874806-ஐ தொடர்புகொண்டு, நம் வாசகர்கள் சிலர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

இந்த நிலையில், சதாம் உசேனின் தந்தை செவ்வாய்க்கிழமை மாலை நம்மிடம் பேசும்போது, ''கடந்த இரண்டு நாட்களாக டிக்கெட் எடுக்க பணமில்லாமல் என் மகன் கஷ்டப்பட்டார். தற்போது குவைத்தில் இருக்கும் 'தி இந்து' தமிழ் வாசகர்கள் செய்த உதவியால் விமான டிக்கெட் கிடைத்துவிட்டது. வரும் செப்டம்பர் 26-ம் தேதி சென்னை திரும்புகிறார். வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு குவைத்தில் இருந்து புறப்படுகிறார். மறுநாள் சனிக்கிழமை காலை சென்னை வருகிறார். உதவிக்கரம் நீட்டியவர்களை மறக்க முடியாது'' என்றார் நெகிழ்ச்சியுடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x