Published : 19 Jun 2020 11:42 AM
Last Updated : 19 Jun 2020 11:42 AM

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் சுற்றினால் வழக்கு: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் சுற்றினால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று கோவை ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கோவையைப் பொறுத்தவரை மே மாதம் இறுதி வரை கரோனா பாதிப்பு பெரிதாக இல்லாமல் இருந்தது. ஜூன் முதல் வாரம் முதல் விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மூலம் கரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்தது. எனவே வெளி மாநிலங்களில் இருந்து விமானங்கள் மூலம் வருகை தருபவர்களுக்கு கோவை விமான நிலையத்திலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தவிர சாலை வழியாக வெளி மாநிலங்கள் மற்றும் சென்னை போன்ற வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கும் சோதனைச் சாவடிகளில் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த வகையில் தற்போது மாவட்டத்திற்குள் வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் மூலமாக இதுவரை 187 பேருக்கு மேல் கரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 41 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 17,938 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் சுற்றினால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

‘‘கோவை மாநகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் தனிமைப்படுத்தப்படும் நபர்கள் எவ்விதக் காரணங்களுக்காகவும் வெளியில் வரக்கூடாது. சிலர் அறிவுரைகளை மீறி வெளியில் நடமாடுவதாகத் தகவல் வருகிறது. அவ்வாறு வெளியே வருபவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து எந்த முன்னறிவிப்பும், அனுமதியும் இன்றி கோவை மாவட்டத்திற்கு வருவோர் குறித்து, அருகில் வசிப்பவர்கள் 1077 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் உள்ள பகுதிகளில் வருவாய்த் துறை, மாநகராட்சி மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொண்டு அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 100 சதவீதம் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்லும் போதும், அன்றாடப் பணிகளை மேற்கொள்ளும்போதும் சமூக இடைவெளியைத் தவறாது பின்பற்ற வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் உதவி ஆணையாளர்கள் கவனத்துடன் கண்காணிப்பில் ஈடுபட்டு முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபாரதம் விதிக்கவேண்டும். இறைச்சிக் கடைகள், மீன் மார்க்கெட், உழவர் சந்தை மற்றும் மளிகைக் கடைகளில் அதிகப்படியான மக்கள் கூடுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும். அறிவுரைகளை மீறிக் கூட்டம் கூடும் நிலையில் இவற்றை மூடுவது குறித்துப் பரிசீலிக்கப்படும்.

ஊராட்சித் துறை மற்றும் வருவாய்த் துறையின் சார்பில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கரோனா வைரஸ் தொற்று அபாயம் குறித்து ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், உணவு விடுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணியாளர்களுக்குக் கட்டாயம் தெர்மல் ஸ்கேனிங் செய்யவேண்டும். கோவை மாவட்டத்திற்குள் அனுமதி பெற்று வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தருகின்றவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வரக்கூடிய வாகனங்களைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

சோதனைச் சாவடிகளில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை, ஆகிய துறைகள் குழுவாக ஒருங்கிணைந்து கண்காணிப்புப் பணியினைத் தொடர்ந்து 24 மணி நேரமும் மேற்கொள்ளவேண்டும். இ-பாஸ் இல்லாமல் மாவட்டத்திற்குள் வரும் வாகனங்களை வட்டாட்சியர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். போலியான இ-பாஸ் தயாரிக்கும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, கடை உரிமையாளர் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.’’

இவ்வாறு கோவை ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x