Published : 04 Sep 2015 11:02 AM
Last Updated : 04 Sep 2015 11:02 AM

கல்விக் கடன் வட்டி மானியத்தில் முடங்கிக் கிடக்கும் ரூ.2,426 கோடி : ஒன்றரை ஆண்டாக பயன்படுத்தாமல் உள்ள வங்கிகள்

இந்தியா முழுவதும் கல்விக் கடனுக்கு வட்டி மானியம் அளிப்பதற்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் ரூ.2,426.18 கோடி ஒன்றரை ஆண்டாக பயன்படுத்தப்படாமல் உள்ளது.

கடந்த 2014 பிப்ரவரி 17-ல் சமர்ப் பிக்கப்பட்ட மத்திய அரசின் இடைக் கால பட்ஜெட்டில், ‘புதிய விரிவுபடுத் தப்பட்ட மத்திய வட்டி மானிய கல்விக்கடன் திட்டத்தின்கீழ், 2009 மார்ச் 31-ம் தேதி வரை கல்விக் கடன் பெற்றவர்களின் வட்டி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இந்தக் கடன்களுக்காக 31-12-2013 வரை நிலுவையில் உள்ள வட்டியை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். அதற்கு பிந்தைய காலத்துக்கான வட்டியை சம்பந்தப்பட்ட மாணவர் கள் செலுத்த வேண்டும்’ என அப் போதைய நிதியமைச்சர் ப.சிதம் பரம் அறிவித்தார்.

இதற்காக ரூ.2,600 கோடி ஒதுக் கப்படுவதாகவும் இதன் மூலம் இந்தியா முழுவதும் சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் பயனடைவார் கள் என்றும் சிதம்பரம் தெரிவித் திருந்தார். அதன்படியே, மத்திய அரசால் ரூ.2,600 கோடி நிதியை, கல்விக்கடனுக்கான முன்னோடி வங்கியான கனரா வங்கிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த நிதியை வங்கிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதில் ரூ.173.82 கோடி மட்டுமே பயனாளிகள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந் துள்ளது.

இதன் மூலம் 3,44,511 மாணவர்கள் மட்டுமே பயனடைந் துள்ளனர். எஞ்சிய நிதி ரூ.2,426.18 கோடி, பயன்படுத்தப்படாமல் ஒன் றரை ஆண்டாக கிடப்பில் உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் கல்விக் கடன் திட்டம் தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தத் தகவலை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மத்திய கல்வி அமைச்சகத்துக்கு அறிக்கையாகவே தாக்கல் செய் துள்ளது. இந்த அறிக்கைக்குப் பிறகும் இந்த நிதி இன்றைய தேதி வரை பயன்படுத்தப்படாமலேயே வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வங்கிகள் தரப்பில் கேட்டபோது, ’’வட்டி மானியம் அளிப்பது குறித்து பட்ஜெட்டில் ப.சிதம்பரம் அறிவித்தது ஒன்றாக வும் அதன் பிறகு எங்களுக்கு வந்த சுற்றறிக்கை வேறாகவும் இருந்தது. 2009-க்கு முன்பு கல்விக் கடன் பெற்றவர்களின் கல்விக் கடனுக்கு 31-12-2013 வரை நிலுவையில் உள்ள வட்டியை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்பது சிதம் பரத்தின் அறிவிப்பு. ஆனால், சுற்றறிக்கையில், ‘2009-க்கு முன்பு கல்விக் கடன் பெற்றவர்களுக்கு அவர்கள் படிக்கின்ற காலம் வரையிலான வட்டியை தனியாக கணக்கிட வேண்டும். படிப்பு முடித்த நாளிலிருந்து 31-12-2013 வரையிலான காலத்துக்கான வட்டியை தனியாக கணக்கிட வேண்டும்.

இந்த இரண்டில் எது குறைவாக உள்ளதோ அதை வட்டி மானியமாக கழித்துக் கொள்ளலாம். எஞ்சிய வட்டி தொகையையும் அசலையும் கடனாளிகளிடமிருந்து 120 மாத தவணைகளில் வசூலிக்க வேண்டும்’ என்று இருந்தது. கல்விக் கடன் வட்டி தள்ளுபடி விவகாரத்தில் இப்படி குழப்பமான அறிவிப்புகள் இருந்ததாலும் தனித் தனியாக வட்டி கணக்கிடுவதில் சில சிரமங்கள் இருந்ததாலும் பெரும்பாலான வங்கிகள் மத்திய அரசு ஒதுக்கிய வட்டி மானியத் தொகையை பயன்படுத்திக் கொள்ளவில்லை’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x