Published : 16 Jun 2020 07:26 AM
Last Updated : 16 Jun 2020 07:26 AM

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கு விதிகளை மீறுவோர் உடனடியாக கைது: கண்காணிப்பு பணியில் 15 ஆயிரம் போலீஸார்

சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்குவிதிகளை மீறுபவர்களை உடனடியாகக் கைது செய்ய காவல் துறைஅதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்காக கண்காணிப்பு பணியில்15 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பாதிப்புஎண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட உள்ளன. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று முதலேஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வரும் 19-ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு விதிகளை மீறுபவர்களை உடனடியாக கைது செய்யவும் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் இருந்து முறையான அனுமதி இல்லாமல் பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களை பிடித்து தனிமைப்படுத்தவும் அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யவும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவும் காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும்,சோதனை சாவடிகளும் அதிகரிக்கப்பட உள்ளன. அத்தியாவசியத் தேவை இன்றி தடையை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.முழு ஊரடங்கின்போது ரோந்து, கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் 15 ஆயிரம் போலீஸார் ஈடுபட உள்ளனர். உடல்நலக் குறைவு உள்ளவர்கள், 55 வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கு காவல் ஆணையர் விதிவிலக்கு அளித்துள்ளார். இந்தப் பணிக்காக சட்டம் ஒழுங்கு, குற்றப் பிரிவு, ரவுடிகள் ஒழிப்பு, மத்திய குற்றப்பிரிவு உட்பட பலபணிகளில் அமர்த்தப்பட்ட போலீஸார் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

கூடுதல் காவல் ஆணையர்கள் அறிவுரை மற்றும் இணைஆணையர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையர்கள் மேற்பார்வையில், சட்டம் ஒழுங்கு,குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்புபணிகள் முழு அளவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

முகக் கவசம் அணியாவிட்டால் நடவடிக்கை சுகாதாரத் துறை செயலாளர் எச்சரிக்கை சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் மேற்கொள்ளப்படும் கரோனா தொற்று தடுப்பு பணிகளை அமைச்சர் சி.காமராஜ், சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கரோனா தடுப்பு கண்காணிப்பு சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி பங்கஜ்குமார் பன்சால், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

முழு ஊரடங்கை அமல்படுத்த போதிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அத்தியவாசியப் பொருட்களை வாங்க மக்கள் அவசரம் காட்ட வேண்டாம். இந்த முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் முகக் கவசம் அணியாமல் இருந்தால், காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முகக் கவசத்தை தன்னுடைய உயிர் பாதுகாப்பு கவசமாக நினைக்காமல், மற்றவர்களின் உயிர் பாதுகாப்பு கவசமாக நினைத்து அணியவேண்டும். இவ்வாறு ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x