

தண்டையார்பேட்டையில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்கள், அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அதற்காக 2 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
கரோனா தொற்று தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக மொத்த தொற்று எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதில் 70 சதவீதம் பேர் சென்னையில் கண்டறியப்பட்டுள்ளனர். சென்னையின் 6 மண்டலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ராயபுரம் மண்டலம் 5 ஆயிரத்தை நோக்கிச் செல்ல சில நூறு எண்ணிக்கை மட்டுமே மிச்சமுள்ளது. கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த 6 அமைச்சர்களை தலா மூன்று மண்டலங்களுக்கு நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மண்டல வாரியாக ஆய்வு நடத்தி வருகிறார்கள். அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு தண்டையார்பேட்டை மண்டலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று ஆய்வு நடத்திய பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
''கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அவரது குடும்பத்தார் தொடர்புடையோரை அழைத்துவர 4 பேருந்துகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று ஒருவருக்கு வந்தால் அவரது வீட்டில் உள்ள மற்றவர்களையும் தனிமைப்படுத்துகிறோம், காரணம் மற்றவர்களுக்கும் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தற்போது 2 மையங்கள் தண்டையார்பேட்டையில் உள்ளன. இதில் 125 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 2 மையங்களிலும் 280 பேரைத் தங்க வைப்பதற்கான வசதி உள்ளது. மேலும் மாநகராட்சிப் பள்ளிகளையும் மையங்களாக மாற்ற உள்ளோம். தண்டையார்பேட்டை குறுகலான பகுதி. அங்குள்ள குடும்பத்தில் யாருக்காவது கரோனா தொற்று வந்தால் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களை அழைத்து வந்து தங்க வைக்க இத்தகைய ஏற்பாடுகளைச் செய்ய உள்ளோம்.
தொற்று இல்லாமல் வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தவர்களில் 8 பேர் வெளியில் சென்றதால் கைது செய்யப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டையில் 2,120 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அதில் 1000 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். என்ஜிஓக்கள் மூலம் வீடு வீடாகச் சென்று கண்காணிக்கும் பணியையும் செய்து வருகிறோம்.
இம்மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளையும் கணக்கெடுத்து ஒரு பட்டியல் மூலம் பராமரித்து அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். நாங்கள் எடுத்துவரும் நடவடிக்கை மூலம் வெகு விரைவில் தொற்று எண்ணிக்கை குறைந்து இயல்பு நிலை வரும்''.
இவ்வாறு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.