Published : 12 Jun 2020 05:29 PM
Last Updated : 12 Jun 2020 05:29 PM

எட்டு வழிச்சாலை மத்திய அரசின் திட்டம்; ஏன் அவசியம்?- முதல்வர் பழனிசாமி பேட்டி

சேலம்

எட்டு வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் போக்குவரத்து விபத்துகள் குறையும், தொழிற்சாலைகள் பெருகும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். விரைவாகச் செல்ல முடியும். இதற்கு முன்னரும் சாலைகள் இப்படித்தானே போடப்பட்டது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

எட்டு வழிச்சாலை திட்டம் அரசியல் கட்சிகளால், அப்பகுதி விவசாய மக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதைக் கடைபிடிக்காததால் திட்டத்துக்கு தடை விதிப்பதாக உயர் நீதிமன்றம் எச்சரித்தது. பின்னர் எட்டுவழிச் சாலையில் மத்திய அரசு சில மாற்றங்களைக் கொண்டுவந்து நிதியைக் குறைத்தது.

இந்நிலையில் எட்டு வழிச்சாலை வழக்கு குறித்து மேட்டுர் அணையைத் திறக்கும் விழாவில் கலந்துகொண்ட முதல்வரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்தார்/

விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய திட்டங்களைச் செய்ய மாட்டோம் என்று அடிக்கடி கூறுகின்றீர்கள், ஆனால் எட்டு வழிச் சாலை தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மத்திய அரசு கேட்கிறது. மாநில அரசின் நிலைப்பாடு என்ன?

சாலையே இல்லாமல் எப்படி போவீர்கள்? இந்தச் சாலைகள் எல்லாம் எப்படி அமைத்தார்கள், சொல்லுங்கள்? பத்திரிகைகளும், ஊடகங்களும்தான் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நிலத்தை எடுத்துத்தான் சாலையே அமைத்திருக்கின்றோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்முடைய தேவைக்கேற்ப நிலத்தை கையகப்படுத்திதான் சாலையை அமைக்கிறோம். அன்றையதினம் திமுக ஆட்சி இருந்தது. அப்பொழுது டி.ஆர்.பாலு மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்.

இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக சுமார் 796 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை அமைத்தார்கள். அப்பொழுதும் நிலம் கையக்கப்படுத்தித்தானே செய்தார்கள். அன்றைய போக்குவரத்துக்குத் தக்கவாறு நிலத்தை கையகப்படுத்தினார்கள். இன்றைக்கு போக்குவரத்து கிட்டத்தட்ட 250 சதவீதம் அதிகரித்திருக்கிறது. எனவே, அதற்குத் தேவையான சாலைகளை மத்திய அரசு அமைத்துக் கொடுப்பதற்குத்தான் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம், மாநில அரசின் திட்டமல்ல. அதற்கு நாம் உதவிதான் செய்கிறோம். ஏனென்றால், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி, நாமக்கல், கரூர், மதுரை போன்ற இடங்களுக்கு இந்தச் சாலை வழியாகச் செல்லலாம். எட்டு வழிச்சாலை சேலத்திற்கு மட்டும் வருவது கிடையாது. சேலம் வழியாக பல்வேறு தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டங்களுக்குச் செல்ல முடியும்.

எதிர்காலத்தில் தொழில் வளம் பெருக வேண்டுமென்று அனைவரும் நினைக்கிறோம். அப்படி தொழில் வளம் பெருகினால் தான் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அப்படி தொழில் வளம் பெருக வேண்டுமென்றால் உட்கட்டமைப்பு வசதி முக்கியம். இப்பொழுது நிதி அமைச்சராக இருக்கின்ற நிர்மலா சீதாராமன் ராணுவத் துறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில், ராணுவ உதிரி பாகங்கள் தயாரிப்பதற்காக பல தொழிற்சாலைகள் நிறுவப்படும் என்று சொல்லியிருக்கின்றார்.

சேலத்திலும் அந்தத் தொழிற்சாலைகள் நிறுவப்படும் என்று சொல்லியிருக்கின்றார். அப்படி பெரிய தொழிற்சாலைகள் வருகின்ற பொழுது உள்கட்டமைப்பு மிக மிக அவசியம். அதுமட்டுமல்ல, இப்பொழுது இருக்கின்ற சாலைகளில் விபத்து ஏற்படுகிறது. விபத்துகளைக் குறைப்பதற்கும் சாலை விரிவாக்கம் தேவை. மேலும், இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் எரிபொருளை மிச்சப்படுத்த வேண்டும், பயண நேரத்தைக் குறைக்க வேண்டும், மாசு குறைக்கப்பட வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

விவசாயத்திற்குத் தேவையான உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் தேவையான அளவு இருப்பு இருக்கின்றதா?

தேவையான விதை, உரம், பூச்சி கொல்லி மருந்துகள் எல்லாம் தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x