Published : 12 Jun 2020 11:27 AM
Last Updated : 12 Jun 2020 11:27 AM

கரோனா பரிசோதனைக்குப் போனாலே குடும்பத்தோடு தனிமைப்படுத்துவோம் என அறிவிப்பு; மக்களை பீதியில் ஆழ்த்தாதீர்கள்: டிடிவி தினகரன்

சென்னை

கரோனா பரிசோதனைக்குப் போனாலே குடும்பத்தோடு தனிமைப்படுத்துவோம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். பிசிஆர் கிட் குறைவாக உள்ளதால் மக்களைச் சோதனைக்கு வராமல் தடுக்கும் முயற்சியாக மிரட்டும் வகையில் இந்த அறிவிப்பு வந்துள்ளதோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“சென்னையில் கரோனா பரிசோதனைக்குச் சென்றாலே, சோதனை செய்துகொள்கிறவரும் அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற மாநகராட்சி ஆணையரின் திடீர் அறிவிப்பு, மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஆளுக்கொன்றாக சொல்லி அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதை ஆட்சியாளர்கள் நிறுத்திவிட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

கரோனாவின் பாதிப்பு ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே போகும் நேரத்தில் சென்னையில் வீடுதோறும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் நேற்று திடீரென ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கரோனா பரிசோதனைக்குச் சென்றாலே சோதனை செய்து கொள்பவரும், அவரது குடும்பத்தினரும் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அதில் கூறியிருக்கிறார். இதுவரை பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களை மட்டுமே இத்தகைய முறையில் தனிமைப்படுத்தி வந்தனர்.

தற்போதைய அறிவிப்பின் படி சோதனையில் நோய் இல்லை ("NEGATIVE") என்று வந்தாலும் குடும்பத்தோடு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் சொல்கிறாரா? இதைக் கேட்ட பிறகு நோய் இருக்கலாமோ எனச் சந்தேகப்படுபவர்கள் கூட தாங்களாக சென்று எப்படி சோதனை செய்துகொள்வார்கள்? அரசின் வசம் கரோனா பரிசோதனைக் கருவிகள் (PCR KIT) குறைவாக இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வரும் நிலையில், பரிசோதனை எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியா இது ? என்று மக்களிடம் சந்தேகம் எழுகிறது.

முதல்வர், சுகாதார அமைச்சர், முதல்வரின் சிறப்பு அங்கீகாரம் பெற்ற ‘தினசரி பேட்டி’ அமைச்சர், தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், கரோனா சிறப்பு அதிகாரி, கரோனா சிறப்பு ஒருங்கிணைப்பாளர், சிறப்புக் கண்காணிப்பு செய்ய தனித்தனியாக அமைச்சர்கள் , மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள், இவர்களோடு சேர்த்து மாநகராட்சி ஆணையர் என இத்தனை பேரும் கரோனா தடுப்புப் பணிகளைப் பற்றி ஆளுக்கொன்றாக பேசியும், செயல்பட்டும், அவரவர் இஷ்டப்படி அறிவிப்புகளை வெளியிட்டும் கரோனாவை விட மோசமாக மக்களை இம்சித்து வருகிறார்கள். ‘தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள்’ என்பது போல் மக்களின் உயிரை வைத்து நாள்தோறும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

திறமையும் அனுபவமும் வாய்ந்த அமைச்சர் அல்லது அதிகாரி தலைமையில், துடிப்பான அதிகாரிகள் குழுவினர் ஒற்றை உத்தரவுக்கு கட்டுப்பட்டு, ஒருங்கிணைந்து செயல்பட்டால்தானே மிக மோசமான பேரிடரை எதிர்கொள்ள முடியும்?. இந்த அடிப்படை கூட புரியாமல் ‘அவருக்கு நெருக்கமானவர்; இவருக்கு வேண்டப்பட்டவர்’ என மக்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் அமைச்சர்களும், அதிகாரிகளும் தனித்தனி ஆவர்த்தனங்கள் செய்து கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இதைவிட முக்கியமாக, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு சார்பில் ஒரே இடத்தில் இருந்து மட்டுமே மக்களுக்கான அறிவிப்புகள் வெளியாக வேண்டும்”.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x