Published : 10 Jun 2020 06:56 AM
Last Updated : 10 Jun 2020 06:56 AM

10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்த தமிழக அரசுக்கு நன்றி- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பாராட்டு

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிவாரண தொகுப்புகளை வழங்குகிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி. உடன், நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார், மாவட்டத் தலைவர் பஞ்சாட்சரம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் அசேன் உள்ளிட்டோர்.

வாலாஜா

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்.வசந்தகுமார், எம்.கே.விஷ்ணுபிரசாத் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மருத்துவமனையில் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டதால் அரசு அவர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் செயல். கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் முழுமையாக தோல்வியை தழுவியுள்ளன.

10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ததை தமிழக காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. நல்ல விஷயங்களை தமிழக அரசு காலம் தாழ்த்தியே செய்கிறது. தேர்வு விவகாரத்தில் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் பஞ்சாட்சரம், முன்னாள் எம்எல்ஏ அசேன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x