Published : 09 Jun 2020 07:22 PM
Last Updated : 09 Jun 2020 07:22 PM

கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் நடைப்பயிற்சிக்குத் தடை: கரோனா கட்டுப்பாடுகள் மீறப்பட்டதால் ஆட்சியர் நடவடிக்கை

கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படாததால், கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் நடைப் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்குத் தடை விதித்திருக்கிறார் கோவை ஆட்சியர் கு.ராசாமணி.

கோவை மாநகரின் மையப் பகுதியாக விளங்குவது ரேஸ் கோர்ஸ் சாலை. இந்தச் சாலையில் அரசுக் கலைக் கல்லூரி, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம், காவல்துறை ஆணையர், டிஐஜி, ஐஜி முகாம் அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்கள், உயர் அதிகாரிகளின் குடியிருப்புகள் போன்ற முக்கியக் கட்டிடங்கள் உள்ளன. சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்தச் சாலையில், குழந்தைகள் விளையாடும் பூங்காக்கள் உள்ளன. நடைப்பயிற்சி மேற்கொள்வோர், வயோதிகர்கள் இளைப்பாறுவதற்கு கான்கிரீட் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சாலையில் காலையிலும் மாலையிலும் நடைப் பயிற்சி, உடற்பயிற்சி செய்வோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் அதிகம். 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரேஸ்கோர்ஸ் நடைப்பயிற்சி சங்கமும் செயல்பட்டுவருகிறது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியிருந்த இந்தச் சாலையில், பொதுமுடக்கத் தளர்வுகள் அறிவித்த பின்பு பழையபடி கூட்டம் அதிகமாக ஆரம்பித்துவிட்டது. இதனால், தனிமனித இடைவெளி குறைந்து தொற்று அபாயம் ஏற்படலாம் எனும் அச்சம் எழுந்த நிலையில், இந்தச் சாலையில் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்குத் தடை விதித்துள்ளார் ஆட்சியர் கு.ராசாமணி.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''கோவையில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்; முகக்கவசம் அணிய வேண்டும்; தேவை இல்லாமல் வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ரேஸ் கோர்ஸ் சாலையில் தினமும் ஏராளமானோர் நடைப் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்கிறார்கள். பலர் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதில்லை, மேலும், முகக்கவசம் அணியாமல் உள்ளனர்.

இதனால் கரோனா தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை ரேஸ் கோர்ஸ் சாலையில் நடைப் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்படுகிறது. இதை மீறுவோர் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x