Published : 08 Jun 2020 10:11 AM
Last Updated : 08 Jun 2020 10:11 AM

கரோனா நோயாளிகளை வீடுகளில் தனிமைப்படுத்தக் கூடாது; விரிவான சிகிச்சையளிக்க ஏற்பாடுகளை செய்க; அன்புமணி

அன்புமணி: கோப்புப்படம்

சென்னை

கரோனா நோயாளிகளை வீடுகளில் தனிமைப்படுத்தக் கூடாது எனவும், விரிவான சிகிச்சையளிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும், பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூன் 8) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடின்றி அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் தங்கி மருத்துவம் பெற வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்றும், வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அனுப்பி வைக்கப்படுவதாகவும் கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கு பதிலாக, அவர்கள் மூலம் மேலும் பலருக்கு கரோனா வைரஸ் பரவுவதற்கு மட்டுமே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 8-ம் தேதி மொத்தம் 6,009 பேர் மட்டுமே கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். தமிழகத்தில் முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நாளில் இருந்து இரு மாதங்களில் 6,009 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர்.

ஆனால், நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 667 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில், அதாவது மே 8-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரையிலான காலத்தில் தமிழகத்தில் 25 ஆயிரத்து 658 புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. சென்னையில் இதே காலத்தில் 19 ஆயிரத்து 106 புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. நேற்றுடன் முடிவடைந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை 4.20 மடங்கு அதிகரித்துள்ளது. இது மிகவும் அதிகம் ஆகும்.

தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் 3.21 மடங்கு மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் கரோனா அதிகரிப்பு விகிதம் 6.27 மடங்காக உள்ளது. முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் இதை நாம் தவிர்த்திருக்க முடியும். அதை செய்யத் தவறியதால் சென்னையில் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சும் அளவுக்கு கரோனா பரவல் அதிகரித்திருக்கிறது.

இது ஒருபுறம் கவலையளிக்கும் நிலையில், மற்றொருபுறம் கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்பதில் கையாளப்படும் அணுகுமுறை கரோனா பரவலை அதிகரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

சென்னையில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளிலும், கரோனா கவனிப்பு மையங்களிலும் உள்ள படுக்கைகள் முழுமையாக நிறைந்து விட்டதாக கூறப்படும் நிலையில், புதிதாக பாதிக்கப்படுவோரில் பெரும்பான்மையினருக்கு மருத்துவமனைகளில் பெயரளவுக்கு மருத்துவ ஆய்வுகள் செய்யப்பட்டு, சில மருந்துகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கூறி அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

அவ்வாறு அனுப்பி வைக்கப்படுபவர்களில் பெரும்பான்மையினரின் வீடுகளில் நோயாளிகளை தனிமைப்படுத்தி வைப்பதற்கான வசதிகள் இல்லை. அவர்கள் வீடுகளில் ஒரே கழிப்பறையை பயன்படுத்துதல், கழிப்பறை இல்லாத வீடுகளில் வசிப்பவர்கள் பொதுக்கழிப்பறைகளை பயன்படுத்துதல் போன்றவற்றால் கரோனா வேகமாக பரவுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு இது தான் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறி இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவ்வாறு இருப்பவர்களால் நோய் பரவாது என்று கூறமுடியாது. கரோனா வைரஸை குணப்படுத்துவதற்கு வேண்டுமானால் சாதாரண மருந்துகளும், மருத்துவ ஆலோசனைகளும் போதுமானவையாக இருக்கலாம்.

ஆனால், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான கண்காணிப்புடன் கூடிய தனிமைப்படுத்துதல் கட்டாயமாகும். கரோனா நோயாளிகளை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அனுப்பி வைப்பதை கைவிட்டு, அவர்களை மருத்துவமனைகள் அல்லது கரோனா கவனிப்பு மையங்களில் தங்க வைத்து சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும் வரை, சென்னையில் என்ன தான் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் நோய்த் தொற்றுகள் அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியாது.

தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் இத்தகைய நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான் 'மின்னல் வேகத்தில் கரோனா: சிறப்பு மருத்துவமனைகள் அமைக்க வேண்டும்!' என்ற தலைப்பில் கடந்த மார்ச் 24-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், 'தமிழ்நாட்டிலும் நோய்ப்பரவலைத் தடுக்கும் வகையில் கரோனா நோயாளிகளுக்கு தனி மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். சென்னையில் கரோனா சிகிச்சைக்கான வசதிகளுடன் தனி மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதேபோல், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கரோனா சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தேன்.

இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நாளில் தமிழகத்தில் வெறும் 12 பேர் தான் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை ஏற்படக்கூடும் என்று மதிப்பிட முடிந்ததால் தான் அப்போதே எச்சரித்திருந்தேன். மார்ச் 19, ஏப்ரல் 25 ஆகிய தேதிகளில் வெளியிட்ட அறிக்கைகளிலும் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கியிருந்தேன். அவற்றுக்கு செயல் வடிவம் தரப்பட்டிருந்தால் சென்னை மாநகரத்தில் இப்படி ஒரு மோசமான நிலைமை ஏற்பட்டிருந்திருக்காது.

சீனாவில் கரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக பல சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, உணவகங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டு, கவனிப்பு மையங்களாக மாற்றப்பட்டன. அதனால் தான் அங்கு மிகவும் எளிதாக கரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது.

சென்னையில் ஒரு சில கல்லூரிகளும், அரங்கங்களும் கவனிப்பு மையங்களாக மாற்றப்பட்டாலும் கூட அது போதுமானதாக இல்லை. சென்னையில் கல்லூரிகள், கல்லூரி விடுதிகள், திருமண அரங்கங்கள், கூட்ட அரங்குகள், உள் விளையாட்டு அரங்குகள் ஆகியவை ஏராளமாக உள்ளன. அவற்றை அடையாளம் கண்டு போதிய வசதிகளுடன் கூடிய கரோனா கவனிப்பு மையங்களாக மாற்ற வேண்டும்; போதிய அளவில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

அறிகுறி இல்லாத கரோனா நோயாளிகளை வீட்டுக்கு அனுப்புவதை கைவிட்டு, பாதிக்கப்பட்ட அனைவரையும் மருத்துவமனைகள்/ கரோனா கவனிப்பு மையங்களில் சேர்க்க வேண்டும்.

அவ்வாறு உருவாக்கப்படும் கவனிப்பு மையங்களில் தரமான மருத்துவத்துடன், 3 வேளையும் சத்தான உணவுகளும், புரத துணைப் பொருட்களும் வழங்கப்பட வேண்டும். அடுத்த இரு மாதங்களுக்கு இத்தகைய அணுகுமுறையை கடைபிடிப்பதன் மூலமே சென்னையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்"

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x