Published : 07 Jun 2020 09:52 AM
Last Updated : 07 Jun 2020 09:52 AM

வந்தவாசி அருகே  நகை அடகு கடை உரிமையாளரை கடத்தி கொலை செய்த 3 பேர் கைது

திருவண்ணாமலை

வந்தவாசி அருகே நகை அடகு கடை உரிமையாளரை கடத்தி கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பொட்டி நாயுடு தெருவில் வசிப்பவர் அசோகச் சக்கரவர்த்தி. இவர் தேசூர் கிராமத்தில் நகை அடகு கடை நடத்தி வந்தார். இவரை கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து காணவில்லை. காணாமல் போன தேதியில் தனது மனைவி நிர்மலா மற்றும் நண்பர் சதீஷ் ஆகியோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் அனுப்பும் நபரிடம் முறையே ரூபாய் 2 லட்சம் மற்றும் ரூபாய் ஒன்றரை லட்சம் கொடுத்து அனுப்புமாறு கூறியுள்ளார். அதன்படி அவர்கள் இருவரும் அந்த நபரிடம் பணத்தை கொடுத்துள்ளனர். பணம் கைமாறியதும் அசோக சக்கரவர்த்தியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதுகுறித்து நிர்மலா கொடுத்த புகாரின் பேரில் தேசூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அசோகச் சக்ரவர்த்தியை கண்டுபிடிக்க டிஎஸ்பி தங்க ராமன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

இதையடுத்து தேசூர் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அசோக சக்கரவர்த்தி பயன்படுத்திய செல்போன் எண் ஆகியவற்றைக் கொண்டு தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர். அதன் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மொளபப்பட்டு கிராமத்தில் வசிக்கும் பாஜக பிரமுகர் திருநாவுக்கரசு மற்றும் தெள்ளார் கிராமத்தில் வசிக்கும் முருகன், கவியரசு ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 16 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி, ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் கார், 2 இரு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, " உள்ளாட்சி தேர்தல் செலவுக்காக அசோகச் சக்கரவர்த்தி இடம் நகைகளை அடகு வைத்து திருநாவுக்கரசு பணம் பெற்றுள்ளார். அந்த அடகு நகைகளை மீட்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பேரில் அசோக சக்கரவர்த்தி கடத்திச் சென்று திருநாவுக்கரசு உள்ளிட்ட மூவரும் கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை அகர கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள தனி நபருக்குச் சொந்தமான இடத்தில் புதைத்துள்ளனர். மேலும், அவர்கள் மூவரும் அசோகச் சக்கரவர்த்தி இடமிருந்து நகை அடகு கடை சாவியை பறித்துக்கொண்டு, கடையைத் திறந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துள்ளனர். சடலம் புதைக்கப்பட்ட இடத்தின் உரிமையாளரையும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம். அவர் அரசியல் செல்வாக்குடன் தலைமறைவாக உள்ளார்" என்றனர். அசோகச் சக்கரவர்த்தியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x