Published : 05 Jun 2020 07:24 AM
Last Updated : 05 Jun 2020 07:24 AM

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு இலவச அரிசி- உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர் களுக்கு 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் தலையீடு செய்ய மத்திய அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் தடை விதிக்கக் கோரி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தி ருந்தார்.

அதில், பொதுமக்களுக்கு இடையூறு இன்றி மாதம் தோறும் இலவச அரிசி வழங்க உத்தரவிட்டு இருந்த நிலையில், அரிசிக்குப் பதிலாக பணமாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்த ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். அதையடுத்து மத்திய அரசும் அரிசிக்குப் பதிலாக பணமாக வழங்க உத்தரவிட்டுள்ளது. அரிசிக்குப் பதிலாக பணமாக வழங்க மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சட்டவிரோதமானது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும், என கோரியிருந்தார்.

ஏற்கெனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திக் கேயன், ‘‘குடியரசுத் தலைவரின் அறிவுறுத்தல்படியே மத்திய அரசு இதுதொடர்பாக உத்தரவு பிறப் பித்துள்ளது. எனவே, அந்த உத்த ரவுக்கு மத்திய அரசு கட்டுப்பட வேண்டும்’’ எனக்கூறி முதல்வர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருந்தார்.

தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து நாராய ணசாமி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதில், ஜனநாயக ரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை ரீதியிலான முடிவுகளுக்கு எதிராக மாற்று திட்டத்தை அறிவிக்க துணைநிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை. மேலும், துணைநிலை ஆளுநரின் முடிவுகள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவை. இலவச அரிசி வழங்கப்படும் என்பது தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதி. அதை நம்பித்தான் மக்களும் இந்த அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். அதை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை, என சுட்டிக் காட்டியிருந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந் தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது முதல்வர் தரப்பில், ‘‘ஒரு திட்டம் தொடர்பாக அரசுக் கும், ஆளுநருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை முறையாக குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்து, அதற்கான ஆவணங்களை மத் திய அரசு பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என ஏற்கெனவே ஒரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அதுமாதிரியான எந்த நடைமுறையும் தற்போது பின்பற்றப்படவில்லை என வாதி டப்பட்டது.

அதற்கு மத்திய அரசு தரப்பில், தற்போது கரோனா பரவல் கார ணமாக 3 மாதங்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பாக புதுச்சேரி ஆளுநர் மற்றும் மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க காலஅவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் வரும் ஜூலை 23-ம் தேதிக்கு தள்ளிவைத்து, அதற்குள் மத்திய அரசும், துணை நிலை ஆளுநரும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x