Published : 01 Jun 2020 06:04 PM
Last Updated : 01 Jun 2020 06:04 PM

குமரியில் குடிமராமத்துப் பணிகளில் முறைகேடு: உண்மை நிலையை விளக்கி அறிக்கை வெளியிடுவதாக நாம் தமிழர் கட்சி அறிவிப்பு    

கன்னியாகுமரி

குமரி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட நீராதாரங்களில் மிகக் குறைவான அளவுக்கே தூர்வாரும் பணிகளைச் செய்துவிட்டு, பெரிய அளவு நிதிக்குப் பணி நடந்ததாகப் பதாகை வைத்திருப்பதாக நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர் தனுஷ்குமார் ’இந்து தமிழ்’ இணையத்திடம் கூறுகையில், “தமிழக அரசு குடிமராமத்துப் பணி அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி குமரி கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளரான நானும், குமரி சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளர் ஜெகதீஸ் ஜோதியும் இணைந்து குமரி தொகுதிக்குட்பட்ட குளங்களில் கள ஆய்வு மேற்கொண்டோம்.

இதில், சீதப்பால் பெரியகுளம், ராமபுரம் குளம், ராமபுரம் கிராமம் மற்றும் ஆலத்தூர் குளம், நல்லூர் கிராமம் உள்ளிட்ட குளங்களில் தூர்வாரும் பணி எதுவுமே நடைபெறாமல் மொத்தமாக 56 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக கணக்குக் காட்டியிருக்கும் தகவல் தெரியவந்தது.

குமரி மாவட்டத்தின் நீராதாரங்கள் வேகமாக அழிந்து வரும் நேரத்தில் அரசு, பொதுப்பணித் துறையின் இவ்வாறான அலட்சியப் போக்கு கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

எனவே, கடந்த ஆண்டு குடிமராமத்துப் பணியின் மூலம் தூர்வாரப்பட்ட குளங்களின் உண்மை நிலையை அறிந்து சரியாகப் பணி நிறைவேற்றப்படாத பட்சத்தில் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களைக் கொண்டு மீண்டும் அதே குறிப்பிட்ட குளங்களை மறுபடியும் இலவசமாகத் தூர்வாரி மக்களுக்குப் பயன்படும் வகையில் அமைத்துத் தரவேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் இதேபோன்ற கள ஆய்வு விரைவில் நடத்தப்பட்டு குமரி மாவட்ட குடிமராமத்துப் பணியின் உண்மை நிலை குறித்த அறிக்கையை வெளியிட இருக்கிறோம்” என்றார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோவும் வெளியிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x