Published : 07 May 2014 12:00 PM
Last Updated : 07 May 2014 12:00 PM

தஞ்சம் தேடி வந்த ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

தமிழகத்தில் தஞ்சம் தேடி வந்த ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இலங்கையில் இராணுவத்தினரின் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல், அகதிகளாக தப்பி வந்த 10 ஈழத் தமிழர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தஞ்சம் தேடி வந்தவர்களை காவல்துறை இரக்கமின்றி கைது செய்து சிறை வைத்திருப்பது வேதனை தருகிறது.

வடக்கு மாநிலத்தில் லட்சக்கணக்கில் குவிக்கப்பட்டிருக்கும் சிங்கள இராணுவத்தினர் ஈழத் தமிழர்களை நிம்மதியாக வாழ விடாமல் கொடுமைப்படுத்தி வருகின்றனர். இலங்கையில் மீண்டும் விடுதலைப் போர் வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் அப்பாவி தமிழ் இளைஞர்களை ராணுவத்தினர் கடத்திச் சென்று சுட்டுக் கொல்வதாக அங்கிருந்து தப்பி வந்த அகதிகள் கூறியிருப்பது இதயத்தில் ஈட்டி பாய்வதைப் போல உள்ளது.

மேலும், தமிழ் பெண்களுக்கு பாலியல் கொடுமை உட்பட பல்வேறு கொடுமைகள் இழைக்கப்படுவதாகவும், பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளை வெளிப்படையாக கூற இயலாது என்றும் இலங்கையிலிருந்து வந்த பெண்கள் கூறியிருப்பதைக் கேட்கும்போது ஈழத்தமிழர்களின் துயரம் இப்போதைக்கு தீராதா? என்ற ஏக்கமும், வேதனையும் தான் ஏற்படுகின்றன.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த போரில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை சிங்களப் படையினர் கொடூரமான முறையில் படுகொலை செய்தனர். இது தொடர்பாக சர்வதேச போர்க்குற்ற மற்றும் இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் தலைமையிலான குழுவின் விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கு ஒத்துழைக்க மறுக்கும் இலங்கை அரசு மீண்டும் தமிழ் இளைஞர்களை தேடிப் பிடித்து சுட்டுக் கொல்லத் தொடங்கியிருக்கிறது. இனவெறி பிடித்த இலங்கை அரசு அதன் குணத்தை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான உலகத்தின் கண்டனங்களையெல்லாம் கண்டுகொள்ளாத இலங்கை அரசு, அந்த நாட்டில் மீதமுள்ள தமிழர்களையும் கொன்றொழித்துவிட்டு முழுமையான சிங்கள தேசத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

இவ்வளவுக்கு பிறகும் இலங்கையிடம் மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பது எவ்வகையிலும் பயனளிக்காது. இனப்படுகொலை முடிந்து 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், உலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களிலிருந்து இலங்கையை பாதுகாத்ததுடன், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்தியா பாதுகாத்து வருகிறது. அதன்விளைவாகத் தான் தங்களைத் தட்டிக் கேட்க ஆளில்லை என்ற துணிச்சலில் சிங்கள ஆட்சியாளர்கள் மீண்டும் இனப்படுகொலையை தொடங்கியுள்ளனர். இதைத் தடுக்காவிட்டால் இலங்கையில் தமிழினம் முற்றாக அழிக்கப்பட்டுவிடும்.

எனவே, இலங்கை தொடர்பான அணுகுமுறையை மாற்றிக் கொண்டு, அங்கு தமிழர்கள் கொல்லப் படுவதையும், கொடுமைப்படுத்தப்படுவதையும் தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கை மீது போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை விசாரணை நடத்தவும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யவும் இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதேபோல், தஞ்சம் தேடி வந்த ஈழத் தமிழர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் தவறான அணுகுமுறையை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.

கைது செய்யப்பட்ட அகதிகளில் 5 பேர் குழந்தைகள் என்பதாலும், அவர்களால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதாலும் அவர்கள் 10 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x