Published : 29 May 2020 11:51 AM
Last Updated : 29 May 2020 11:51 AM

உலகச் சுகாதார நிறுவனத்தின் ‘அற்புதமான’ அறிவுரைகளை பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது: ராமதாஸ்

பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் பேரழிவுகளுக்கு வழிவகுக்கக் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (மே 29) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கிலிருந்து வெளிவருவதற்கு உலகின் பல நாடுகள் ஆயத்தமாகி வருகின்றன. ஊரடங்கால் உருக்குலைந்து போயிருக்கும் உலகப் பொருளாதாரத்தை சீரமைப்பது தான் உலக நாடுகளின் முதன்மை பணியாக இருக்கும் நிலையில், அதற்கான நடவடிக்கைகள் வருங்காலங்களில் கரோனாவை விட மோசமான பேரழிவுகளை ஏற்படுத்திவிடக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் நோய் இன்று காலை வரை உலகின் 215 நாடுகளில் உள்ள 56 லட்சம் பேரைத் தாக்கியுள்ளது. இந்த நோய்க்கு 3 லட்சத்து 55 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரும்பான்மையான நாடுகள் நோயின் தாக்கத்திலிருந்து இன்னும் விடுபடாத போதிலும், தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு கற்பனைக்கு எட்டாத அளவுக்கு பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியிருப்பதால் நோய்த்தடுப்பு பணிகள் ஒருபுறம் தொடரும் நிலையில், மறுபுறம் பல நாடுகள் பொருளாதாரத்தை படிப்படியாக திறந்து விட்டு வருகின்றன.

அடுத்து வரும் நாட்களில் இன்னும் கூடுதலான நாடுகள் தங்களின் பொருளாதாரத்தை முழுமையாக திறந்து விடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் தான் உலக சுகாதார நிறுவனம் இந்த அறிவுரையை வழங்கியுள்ளது.

பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் பசுமைக்கு சாதகமாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், அதற்காக 6 அறிவுரைகளையும் வழங்கியுள்ளது.

1. இயற்கையை பாதுகாக்க வேண்டும்.

2. வீடுகளிலும், சுகாதார கட்டமைப்புகளிலும் தண்ணீர், துப்புரவு வசதிகளுடன் காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைத் தாங்கக்கூடிய தூய்மையான மின்சக்தியும் இருப்பதை உறுதி செய்தல்.

3. கரோனாவுக்கு பிந்தைய நாட்களில் மக்கள் தூய காற்றை சுவாசிப்பதை உறுதி செய்யும் வகையில், காற்று மாசை குறைக்கும் தூய மின்திட்டங்களில் அதிக முதலீடு செய்தல்.

4. மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கட்டுபடியாகும் விலையில் கிடைப்பதை உறுதி செய்தல்.

5. நீடித்த போக்குவரத்தில் தொடங்கி ஆரோக்கியமான இல்லம் வரை நகர்ப்புற திட்டமிடலின் அனைத்து அம்சங்களிலும் ஆரோக்கியத்தை இணைக்கும் வகையில் மாநகரங்களை அமைத்தல்.

6. சுற்றுச்சூழலை மாசு படுத்தி காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தும் படிம எரிபொருட்களுக்கு மானியம் தருவதை நிறுத்துதல் ஆகியவை தான் அந்த அறிவுரைகளாகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைகள் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை மட்டுமின்றி தேவையானவையும் ஆகும். அற்புதமான இந்த யோசனைகளை பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இந்த யோசனைகளை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்திருப்பதன் மூலம் சுற்றுச்சூழலைக் காப்பதில் பாமகவின் நிலைப்பாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் கூட ஊரடங்கால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் ஊரடங்கு முழுமையாக விலக்கப்பட்ட பிறகு, கடிவாளம் இல்லாத குதிரைகளைப் போல பொருளாதாரத்தை விரட்ட அந்த நாடுகள் திட்டமிட்டிருக்கின்றன.

அவ்வாறு செய்வது இயற்கை சமநிலையை சிதைத்து, உலகம் இதுவரை காணாத பேரழிவுகளை ஏற்படுத்திவிடக்கூடும் என்பதால் தான், பொருளாதாரக் குதிரைகளுக்கு கடிவாளம் கட்ட உலக சுகாதார நிறுவனம் முயல்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கைகளை பிற நாடுகளை விட இந்தியா தான் மிகக் கவனமாகவும், உறுதியாகவும் கடைபிடித்தாக வேண்டும். காரணம்... உலகின் மற்ற நாடுகளை விட பொருளாதார மீட்பு என்ற பெயரில் சுற்றுச்சூழலை சீரழிக்கும் பணிகளை இந்தியா தான் தொடங்கியுள்ளது.

2020-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய அனல் மின்நிலையங்களை திறக்கக்கூடாது என்று ஐநா அறிவுறுத்தியும் கூட, அதை மதிக்காமல் 500 நிலக்கரி சுரங்கங்கள் ஏல முறையில் தனியாருக்கு வழங்கப்படும்; அதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி செலவிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த ஒற்றை நடவடிக்கை உலக சுகாதார நிறுவனத்தின் 6 அறிவுரைகளையும் மீறியதாகும்.

உலகையே ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் தாக்குதல் முதல் ஆப்பிரிக்க நாடுகளில் தொடங்கி இந்திய எல்லைகள் வரை விவசாயிகளை நடுங்க வைக்கும் வெட்டுக்கிளி படையெடுப்பு வரை அனைத்து பேரழிவுகளுக்கும் காரணம் காலநிலை மாற்றம் தான்.

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் கரோனாவை விட கொடிய நோய்கள் முதல் மனித குலத்தையே அழிக்கக்கூடிய புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகள் வரை அனைத்தும் உலகை சிதைக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன.

இப்பேரழிவுகள் குறித்து ஐநா முதல் சுற்றுச்சூழல் அமைப்புகள் வரை அனைத்தும் எச்சரிக்கை விடுத்து வரும் போதிலும், அப்பேரழிவுகள் வருவதற்குள் பொருளாதாரத்தை வலுப்படுத்திக் கொள்வோம் என்ற எண்ணத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் இயற்கையை சிதைப்பது கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு ஒப்பானதாகும்.

பொருளாதாரத்தை மட்டும் குவித்து வைத்து விட்டு, மனிதகுலத்தையே அழிவுக்கு ஆளாக்குவது அறிவார்ந்த செயல் அல்ல. எனவே, கரோனாவுக்கு பிந்தைய காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் உலக சுகாதார நிறுவனம் காட்டிய வழியில் 6 அறிவுரைகளை கடைபிடிப்பவையாக அமைய வேண்டும்.

அதற்காக, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான 2015 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கை, ஐநா அமைப்பின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உறுதி ஏற்க வேண்டும்"

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x