Published : 27 May 2020 01:01 PM
Last Updated : 27 May 2020 01:01 PM

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவு: தமிழகத் தலைவர்கள் இரங்கல்

இலங்கை அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 55. அவரது மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர்

இலங்கை அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

ஆறுமுகன் தொண்டமான் பல ஆண்டுகளாக இலங்கை அமைச்சராக திறம்படப் பணியாற்றியவர். இவர் இந்திய வம்சாவளி சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் மட்டுமின்றி, இலங்கை தமிழ் மக்களின் நலனுக்காகப் பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர்.

ஆறுமுகன் தொண்டமானின் மறைவு இலங்கை மக்களுக்கும், அந்நாட்டுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினருக்கும், இலங்கை மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்

ஆறுமுகன் தொண்டமான், மாரடைப்பால் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.

இலங்கையின் மலையகத்தில் கொத்தடிமைகளாக அடக்கி ஆளப்பட்ட தோட்டத் தொழிலாளர்களான தமிழர்களின் குரலாக ஒலித்தவர் பெரியவர் சவுமியமூர்த்தி தொண்டமான். அவர்களுடைய மேம்பாட்டுக்காகவே தனி இயக்கம் கண்டார். அப்போது, கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சங்கத்தை உருவாக்கினார். இயற்கைப் பேரிடர்களின் போதும், நோய் நொடித் தாக்குதல்களில் இருந்தும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காகப் பாடுபட்டார். தோட்டப்புறங்களில் புதிய சாலைகள் அமைத்து, தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக தம் வாழ்நாள் முழுமையும் தொண்டு ஆற்றினார்.

t1

தோட்டப்புறங்களில் வாழ்கின்ற தமிழர்களுக்கு இடையே சாதி, மதப் பாகுபாடுகள் வளராமல் ஒருங்கிணைத்தவர். ஈழத் தமிழர்களுக்குக் கூடுதல் உரிமைகள் வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டு இருந்தார். தந்தை செல்வாவுடன் கூட்டணி அமைத்தார்.

அவருடன் நீண்டகாலத் தொடர்புகள் உண்டு. பல நிகழ்ச்சிகளில் அவருடன் பங்கேற்று உரையாடி இருக்கின்றேன். அவருடைய மூதாதையர்கள், சிவகங்கை மாவட்டம் திருப்பதூர் அருகே பட்டமங்கலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அரசியலில் அவருக்கு உறுதுணையாக இயங்கியவர் அவரது பேரன் ஆறுமுகன் தொண்டமான்.

அவரது மறைவுக்குப் பின்னர், தோட்டத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட இயங்கினார். இலங்கை அரசில் அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கின்றார். எனினும், ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு ஆதரவான கருத்துகளையே கொண்டு இருந்தார்.

சென்னைக்கு வரும்போதெல்லாம், தாயகத்திற்கும், என் வீட்டுக்கும் பலமுறை வந்து சந்தித்து இருக்கின்றார். 55 வயதில், இயற்கை அவரைப் பறித்துக் கொண்டது அதிர்ச்சி அளிக்கின்றது.

அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உற்றார், உறவினர்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ராமதாஸ், நிறுவனர், பாமக

ஆறுமுகன் தொண்டமான் மாரடைப்பால் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசவழி வந்த குடும்பத்தைச் சேர்ந்தவரும், இலங்கையில் மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த சவுமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான ஆறுமுகன் தொண்டமான் மலையகத் தமிழர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். மலையகத் தமிழர்களின் நலனுக்கான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற இந்திய அரசை வலியுறுத்தி குரல் கொடுக்கும்படி பலமுறை பாமகவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

55 வயதான ஆறுமுகன் தொண்டமான் இலங்கை அரசியலில் பல புதிய உச்சங்களைத் தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இளம் வயதிலேயே அவர் மறைந்தது மலையகத் தமிழர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணி, இளைஞரணித் தலைவர், பாமக,

ஆறுமுகன் தொண்டமான் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

ஆறுமுகன் தொண்டமான் இலங்கை அரசுக்கும், தமிழக அரசுக்கும் பாலமாகத் திகழ்ந்தவர். தமிழர்களின் கலை மற்றும் கலாச்சாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்; குரல் கொடுத்தவர்.

ஏற்காடு மாண்ட்ஃபோர்டு பள்ளியில் எனக்கு சில ஆண்டுகள் மூத்த மாணவரும், எனது நண்பரும் ஆவார். ஆறுமுகன் தொண்டமானின் மறைவு இலங்கை மலையகத் தமிழர்களுக்கு பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

டிடிவி தினகரன், பொதுச் செயலாளர், அமமுக

ஆறுமுகன் தொண்டமான் திடீரென காலமான செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த தொண்டமானின் மறைவு இலங்கை மலையகத் தமிழர்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

அவரது மறைவால் வாடும் இலங்கை ஊவா மாகாண அமைச்சர், எனது அன்பு நண்பர் செந்தில் தொண்டமான் மற்றும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மலையகத் தமிழ் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர், தமிழக காங்கிரஸ் கமிட்டி

ஆறுமுகன் தொண்டமான் அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.
இளம் வயதிலேயே அமைச்சராகி, இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காகப் பணியாற்றியவர். தமிழகத்தில் ஏராளமான உறவினர்களையும், நண்பர்களையும் கொண்டவர்.

பழகுவதற்கு இனிமையான பண்பான சகோதரர். இளம் வயதிலேயே அவர் இயற்கை எய்தியிருப்பது மேலும் மன வருத்தம் தருகிறது. அவரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி

மலையக மக்களின் நலன்களுக்காக கடந்த 30 ஆண்டுகளாகப் பணியாற்றியவர் ஆறுமுகன் தொண்டமான். 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பொறுப்பேற்று சிறப்புறச் செயல்பட்டவர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிறுவனர் சவுமியமூர்த்தி தொண்டமானின் குடும்பவழி வாரிசாக மட்டுமின்றி, அவருக்குப் பின்னர் காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்று அரசியல் வாரிசாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.

சிங்களத் தலைவர்களோடு அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் மலையக மக்களின் நலன்களுக்காக அவர்களுடன் இணக்கமான நட்பைக் கொண்டிருந்தார். 2010 ஆம் ஆண்டு இலங்கைக்குச் சென்றிருந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை மலையகத்திற்கும் அழைத்துச்சென்று தோட்டத் தொழிலாளர்களைச் சந்திக்க ஏற்பாடுகளைச் செய்தார்.

தனிப்பட்டமுறையில் ஆறுமுகன் தொண்டமானும் அவரது உறவினர்- மாகாண அமைச்சர் செந்தில்தொண்டமானும் என் மீது மாறாத பற்று கொண்டவர்கள் என்கிற நிலையில், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் திடுமென உயிரிழந்தார் என்பது ஏற்கவியலாத துயரமாக உள்ளது.

அவரது மறைவு அவரது கட்சிக்கும் மலையக மக்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடுகிற அவரது குடும்பத்தினருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

பாரம்பரிய குடும்பத்தவரான, தோட்டத் தொழிலாளர் நலன் காக்கும் பெரியவர் சவுமிய தொண்டமானின் பேரனான ஆறுமுகன் தொண்டமான், அதே இலக்கோடு சியான் தொழிலாளர் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்று திறம்பட நடத்திய தலைவர்.

காட்சிக்கெளியவர் - எவரிடத்திலும் மிகவும் அன்புடனும், பண்புடனும் பழகுபவர்.

சென்னை வரும் போதெல்லாம் பெரியார் திடலுக்கு வந்து நம்மைச் சந்தித்து உரையாடித் திரும்பத் தவறவே மாட்டார். மறைவதற்கு முதல் நாள்கூட மலாயா தமிழர்கள், இந்திய தமிழர்கள் - தொழிலாளர்கள் நலன் குறித்த பல திட்டங்களை இந்திய அய் கமிஷனருடன் விவாதித்துள்ளார்!

இயற்கையின் கோணல் புத்தி என்பார் பெரியார்; அவரது நடுத்தர வயதில் இப்படி ஒரு கொடுமையா? எளிதில் ஏற்க முடியவில்லை.

என்றாலும் அவரது தொண்டறம் அவரை என்றும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வாழ்பவராக வரலாற்றில் நிலை நிறுத்தும். அவரது இழப்பு - அக்குடும்பத்திற்கும், இலங்கை அரசுக்கும் மட்டுமல்ல; உழைக்கும் தமிழர்களுக்கு - உலகிற்கே மாபெரும் ஈடு செய்ய முடியாத இழப்பு.

ஆறுமுகன் தொண்டமான் குடும்பத்தினருக்கு நமது ஆறுதலும், இரங்கலும் - அவருக்கு நமது வீரவணக்கம்!

ஜி.கே.வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்

ஆறுமுகன் தொண்டமான் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. தனது கடின உழைப்பால் தான் சார்ந்த கட்சியில் பல்வேறு பதவிகளில் மிகச்சிறப்பாக இயக்கப் பணியும், மக்கள் பணியும் ஆற்றியவர். குறிப்பாக இந்திய வம்சாவளித் தமிழர்களின் நலன் காக்க வேண்டும் என்பதற்காக அயராது பாடுபட்டு வந்தவர்.

இந்திய – இலங்கை இடையே நல்லுறவு மேம்படவும் தொடர்ந்து குரல் கொடுத்த பெருமைக்குரியவர். அந்த வகையில் நேற்று கூட இலங்கைக்கான இந்தியத் தூதரை – இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று ஆறுமுகன் தொண்டமான் காலமானது இலங்கையில் உள்ள தமிழர்களை பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவு ஒட்டு மொத்த இலங்கைக்கும் பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தமிழர்களுக்கும் தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x