Published : 20 May 2014 11:00 AM
Last Updated : 20 May 2014 11:00 AM

முழு நேரப் பணியில் உள்ளவர்களுக்கு மட்டும்தான் 10 ஆண்டுகள் பணி நிரந்தர அரசாணை- உயர் நீதிமன்றம் உத்தரவு

பத்து ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யும் அரசாணை, முழு நேரப் பணியில் நியமனம் செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கல்வித் துறை உள்பட பல துறைகளில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த 36 பேரை பணி நிரந்தரம் செய்யக் கோரி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டன.

தமிழகத்தில் அரசுத் துறையில் பணியில் சேர்ந்து 2006, ஜன. 1-ம் தேதியன்று பத்து ஆண்டுகள் பணி முடித்த தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு 2006, பிப். 28-ம் தேதி அரசாணை (எண்:22) பிறப்பித்தது. அந்த அரசாணையின்படி பத்து ஆண்டுகள் பணி முடித்த பலர் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதிகள், அரசாணை எண் 22-ன்படி மனுதாரர்களைப் பணி நிரந்தரம் செய்யுமாறு உத்தரவிட்டனர். ஆனால், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கல்வி, சமூகநலம், தொல்லியல் துறைகளில் துப்புரவுப் பணியாளர், இரவுக் காவலர், உதவியாளர், சமையலர் ஆகிய பணிகளில் பகுதி நேர பணியாளர்களாக 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த 36 பேரை பணி நிரந்தரம் செய்ய தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து அரசுத் தரப்பில் தனித் தனி மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் அனைத்தையும் விசாரித்து நீதிபதிகள் வி. ராமசுப்பிரமணியன், வி.எம். வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு:

அரசுத் துறையில் 2006, ஜன. 1-ம் தேதியில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு 2006-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 22-ல் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணை, நியமனத்தின்போது முழு நேரப் பணியில் நியமிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும். நிரந்தரப் பணியிடங்களில் காலியிடங்களைத் தவிர்க்க, முழு நேரப் பணியில் நியமிக்கப்பட்டவர்கள் நிரந்தரப் பணியிடங்களில் நியமிக்கப்படுகின்றனர். பகுதி நேரம், தொகுப்பூதியம், தற்காலிக பணிகளில் உள்ளவர்களுக்கு இந்த அரசாணை பொருந்தாது என்று 2013, ஜூன் 27-ம் தேதி பிறப்பித்த அரசாணை 74-ல் கூறப்பட்டுள்ளது. 2006, ஜன. 1-ம் தேதி வரை 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமே அந்த அரசாணை பொருந்தும். அந்த தேதிக்குப் பிறகு 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்குக் கிடையாது. எனவே, 36 பேரை பணி நிரந்தரம் செய்யக் கோரி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில் தனி நீதிபதி உத்தரவுக்குப் பிறகு யாராவது பணி நிரந்தரம் செய்யப்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x