Published : 24 May 2020 07:31 AM
Last Updated : 24 May 2020 07:31 AM

வறியவர்களுக்கு வழங்கி மகிழ்வோம்!

பெருநாள் இந்த ஆண்டில் மாறுபட்ட ஒன்றாக, இறை நாட்டப்படி அமைந்துவிட்டது. கரோனா தாக்குதலால் உலகமே முடங்கியுள்ள நிலையில், இப்பெருநாள் நம்மை வந்தடைந்துள்ளதால் வழக்கமான உற்சாகங்கள், தக்பீர் முழக்கங்களுடன் பெருநாள் தொழுகை மைதானத்துக்கோ, பள்ளிகளுக்கோ கூட்டமாகச் சென்று சிறப்பு தொழுகையை நிறைவேற்றிவிட்டு, அனைவரும் கைளாகு செய்து வாழ்த்து பரிமாறுவதெல்லாம் இயலாமல் போய்விட்டது. ஆனாலும், இது மட்டுமே பெருநாளின் அடிப்படை என்பதோ, இது இல்லாவிட்டால் பெருநாளே இல்லை என்பதோ இல்லை.

எம்பெருமானார் (ஸல்) அவர்கள், தான் பிறந்த பூமியான மக்கமா நகரத்தில் இருந்து மதீனமா நகருக்கு வந்த புதிதில், அந்நகர மக்கள் ஆண்டுக்கு 2 நாட்கள் விழா எடுத்து விமரிசையாக கொண்டாடினர். அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அதற்கு காரணம் கேட்டபோது, ‘‘எங்கள் மூதாதையர் இந்நாட்களில் விழா எடுத்ததால் நாங்களும் எடுக்கிறோம். காரணமெல்லாம் தெரியவில்லை’’ என்றனர்.

காரணம் தெரியாத இந்த விழாக்களைவிட, சிறந்த அடிப்படைகளைக் கொண்ட 2 பெருநாட்களை இறைவன் நமக்கு வழங்கியுள்ளான். ஒன்று தியாகத் திருநாள் (பக்ரீத்), இன்னொன்று ஈகைத் திருநாள் என நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள். இஸ்லாமிய ஷரீஅத்தின், மார்க்கத்தின் பார்வையில் இவைஇரண்டு மட்டுமே கொண்டாடத்தக்க பெருநாட்கள். அந்த கொண்டாட்டமும் அறிவுப்பூர்வமானதாக, அடுத்தவர்களுக்கு உதவுவதாக அமைந்திருப்பது சிறப்புக்குரிய அம்சம்.

பெருநாளின் முக்கிய அம்சம்

இஸ்லாமிய மாதங்களில் 9-வது மாதமான புனித ரமழான் மாதம் முழுவதும் பகலெல்லாம் பசித்திருந்து, பயபக்தியாளர்களாக மாறி, நாம் வைத்த உண்ணாநோன்பில் ஏற்பட்ட குற்றங்குறைகள், தவறுகளை நிவர்த்தி செய்வதற்காக, நமக்கு இறைவன் வழங்கியதில் இருந்து கொஞ்சத்தை, வறிய மக்களுக்கு வழங்கி,அவர்களையும் மகிழ்வுறச் செய்வது இந்த ஈகைப் பெருநாளின் முக்கிய அம்சம்.

எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த ரமழான் மாதத்தில்சூறாவளி காற்று வீசுவதுபோல தான தர்மம் செய்வார்கள். பெருநாள் அன்றும் ஆதரவற்றவர்களை அரவணைத்து, அவர்களுக்கு தங்களால் இயன்றதை வழங்கிஅவர்களை சந்தோஷப்படுத்துவார்கள். நபிகளின் இந்த வழிமுறையை அனுசரிக்காமல் புத்தாடை உடுத்தி, நல்ல உணவுகளை உண்டு எவ்வளவு விமரிசையாகக் கொண்டாடினாலும் இறை பொருத்தத்தை அடைந்தவராகவோ, நாயகத்தின் வழிமுறையை பின்பற்றியவராகவோ ஆகமுடியாது.

விளம்பரப்படுத்தாமல் உதவுங்கள்

மாறாக, பெருநாளுக்கு ஓரிரு நாள் முன்பே நம் பகுதியில் நம்மைவிட வாழ்வாதாரத்தில் பின்தங்கியவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான எல்லா பொருட்களையும், யாரிடமும் விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், பரம ரகசியமாக, பெருநாள் அன்று அவர்களது வீடுகளுக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும். ஆதரவற்ற அவர்களது பச்சிளம் குழந்தைகளுக்கு, நம் வீட்டுக் குழந்தைகளின் சில நல்லஆடைகளையும் வழங்க வேண்டும். பெருநாளைக்கு முதல் நாளே இப்படி செய்துவிட்டால், அவர்களின் உள்ளம் குளிரும். அதன்மூலமாக, இறைவனின் பொருத்தம் மட்டுமல்லாது, கொடிய நோய்களில் இருந்து நிவாரணமும் நமக்கு கிடைக்கும். நம் தேவைகளும் நிறைவேறும்.

தான தர்மங்கள் நமது ஹலாலான சம்பாத்தியம் அல்லது நமக்கு வந்த அன்பளிப்புகளில் இருந்து இருக்க வேண்டும். ஊழல், கொள்ளை, திருட்டு, மோசடி போன்றவற்றில் இருந்து செய்யப்படும் ஸதக்காவுக்கு எந்த நன்மையும் இல்லை என்று நாயகம் (ஸல்) கூறியிருக்கிறார்கள்.

அல்லாஹ் உதவி செய்வார்

யார் தனது இறை விசுவாசியான சகோதரனின் தேவையை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறானோ, அவன் அவ்வாறு ஈடுபட்டிருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வதில் ஈடுபட்டிருக்கிறான் என்று நபிகள் கூறினார்கள்.

மறுமையில் அல்லாஹ் ஒரு அடியானிடம், ‘‘நான் உலகத்தில் பசித்திருந்தேனே, எனக்கு உணவுஅளித்தாயா?’’ என்று கேட்பானாம்.அதற்கு அவன், ‘‘யா அல்லாஹ்!நீதான் உலக மக்கள் அனைவருக்கும் உணவு அளிப்பவன். அப்படிஇருக்க, நான் எவ்வாறு உனக்குஉணவு வழங்க முடியும்?’’ என்றதற்கு அல்லாஹ், ‘‘உனது பகுதியில் இன்ன நபர் பசித்திருந்தாரே அவருக்கு நீ உணவு வழங்கியிருந்தால் என்னை நீ பெற்றிருப்பாய்’’ என்று கூறுவானாம்.

இறைவன் நமது அனைத்து செயல்களையும் பார்த்தவனாக இருக்கிறான். ஒரு வறியவனின் பசியைப் போக்குவது இறைவனுக்கு பணிவிடை செய்த அந்தஸ்தை நமக்கு பெற்றுத் தரும். வறியவர்களுக்கு நம்மால் இயன்றதை வழங்கி, இறை விருப்பப்படி ஈகைத் திருநாளைக் கொண்டாடுவோம்!

கட்டுரையாளர்:

காயல்பட்டினம் ஜாவியா அரபுக் கல்லூரி பேராசிரியர். மவ்லவி க.சுல்தான் ஸலாஹுத்தீன் மழாஹிரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x