Last Updated : 22 May, 2020 01:49 PM

 

Published : 22 May 2020 01:49 PM
Last Updated : 22 May 2020 01:49 PM

கரோனாவால் கஷ்டப்படும் மக்களுக்கு மேலும் ஷாக் கொடுக்கும் மின்சார வாரியம்: மதுரையில் குவியும் புகார்கள்

கரோனா காரணமாக ஏற்கெனவே விலையேற்றம், வேலையிழப்பு, வருமான இழப்பு என்று அடிமேல் அடிவாங்கிக் கொண்டிருக்கும் ஏழை, நடுத்தர வர்க்கத்துக்கு இன்னொரு அடி விழுந்திருக்கிறது. அது, வழக்கத்தைவிடப் பல மடங்கு அதிகமாக வந்திருக்கும் மின்கட்டணம்.

மதுரை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் மக்களில் பலர் இம்மாத மின்கட்டணத்தைச் செலுத்துவதற்காக மின்வாரிய அலுவலகங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். வழக்கமான தொகையை அவர்கள் கொடுத்தபோது, உங்களுக்கு இந்த மாதம் இதைப்போல மூன்று மடங்கு பில் வந்திருக்கிறது என்று சொல்ல கரண்ட் ஷாக் அடித்ததைப் போல அதிர்ந்திருக்கிறார்கள்.

மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த ராஜன் என்பவர், வழக்கம் போல 500 ரூபாய் நோட்டுடன் மின்கட்டணம் செலுத்தப் போயிருக்கிறார். காரணம், அவருக்கு ஜனவரி மாதம் 390 ரூபாயும், மார்ச் மாதம் 420 ரூபாயும் மின்கட்டணமாக வந்திருந்தது. மே மாதமும் அதை ஒட்டித்தானே இருக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு அதிர்ச்சி. 2,200 ரூபாய் கட்டச் சொல்லியிருக்கிறார்கள் மின்வாரியத்தினர். 'கண்டிப்பாக ஏதோ குளறுபடி நடந்திருக்கிறது. ஏங்க, உங்க ஊழியர்தான் ரீடிங் எடுக்க வீட்டுக்கு வந்தாரே? ஏன் அதை அட்டையில் எழுதவில்லை. அல்லது மெசேஜ் அனுப்பவில்லை' என்று கேட்டதற்கும் பதில் இல்லை.

இதுகுறித்து ராஜன் 'இந்து தமிழ்' இணையத்திடம் கூறுகையில், "கடந்த 2 வருடங்களில் அதிகபட்சமாக நான் செலுத்திய தொகையே 500 ரூபாய்தான். இந்த மாதம் பொது முடக்கம் காரணமாகக் கூடுதல் நேரம் வீட்டில் இருந்ததால், மின்கட்டணம் கொஞ்சம் உயரலாம் தப்பில்லை. ஆனால், வழக்கமான கட்டணத்தைவிட 5 மடங்கு கூடினால் எப்படி ஏற்க முடியும். எங்கள் பகுதியைச் சேர்ந்த வில்லியம் என்பவருக்கு 4,800 ரூபாய் மின்கட்டணமாக வந்திருக்கிறது. 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று சொல்கிறார்கள். ஆனால், கட்டணம் இவ்வளவு வருகிறது. எதிலும் வெளிப்படைத் தன்மை இல்லை. ஏற்கெனவே மக்கள் வருமானமின்றித் தவிக்கிறபோது, அரசு நிறுவனமே இப்படிக் கொள்ளையடிக்கலாமா?" என்றார்.

இதுபற்றி மதுரை மின்வாரிய அதிகாரிகளிடம் பேசியபோது, "இரு மாத மின்கட்டணத்தை ஒவ்வொரு மாதத்துக்கும் தனித்தனியாகப் பிரித்து, கணக்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, ஒருவர் 840 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியிருந்தால், 420, 420 என்று இரண்டாகப் பிரித்து ஸ்லாப் படி மின்கட்டணத்தைக் கணக்கிட வேண்டும். கவனக்குறைவாக இரண்டு மாதத்துக்கும் சேர்த்து கட்டணத்தைக் கணக்கிட்டிருக்கலாம். அல்லது அவரது வீட்டில் உள்ள மின் மீட்டரில் குறைபாடு இருக்கலாம்.

எதுவாக இருந்தாலும் எழுத்துபூர்வமாகப் புகார் கொடுத்தால், நுகர்வோரின் பாதிப்பைச் சரி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒருவேளை, மின்கட்டணம் செலுத்தப் பணம் இல்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். ஜூன் 6-ம் தேதி வரை அபராதமின்றிக் கட்ட அரசு அனுமதித்துள்ளது" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x