Published : 03 Aug 2015 08:19 AM
Last Updated : 03 Aug 2015 08:19 AM

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: 2 மாதத்தில் 112.9 மி.மீ. மழை பதிவு

தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களில் 112.9 மி.மீ. மழை பதிவாகி யுள்ளது. இது சராசரியாக பெய்யும் மழையைவிட 5 சதவீதம் குறைவாகும்.

தென்மேற்கு பருவ காலத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஜூன் 1-ம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை 5 நாட்கள் தாமதமாக தொடங்கினாலும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. ஜூலை மாதத்தில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்தது.

கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் இதுவரை பதிவான மழை நிலவரப்படி மாநிலத்தில் 112.9 மி.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 5 சதவீதம் குறைவாக இருந்தாலும் பருவமழை முடியும் முன்பு மழையின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் அதிகபட்ச மழைப் பொழிவை பெற்ற மாவட்டம் நீலகிரியாகும். இங்கு கடந்த 2 மாதங்களில் 403 மி.மீ. மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் 286.1 மி.மீ. மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 26.5 மி.மீ., திருப்பூரில் 42 மி.மீ., பெரம்ப லூரில் 57.1 மி.மீ. மழை பெய்துள்ளது.

மாநிலத்தில் நேற்று பதிவான மழை நிலவரப்படி கடலூர் மாவட்டம் சிதம்பரம், நாகப்பட்டினம் மாவட்டம் அணைக்காரன்சத்திரம் ஆகிய இடங்களில் 7 செ.மீ., கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு, நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஆகிய இடங்களில் 6 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, மதுரை மாவட்டம் திருமங்கலம், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். சென்னையில் இன்று வெயில் தணிந்து அதிகபட்ச வெப்பம் 32 டிகிரியாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x