Published : 18 May 2020 07:30 AM
Last Updated : 18 May 2020 07:30 AM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.வரதராஜன் உடல் தகனம்: கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், கே.என்.நேரு அஞ்சலி

திருச்சி ரங்கத்தில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.வரதராஜனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி உள்ளிட்டோர்.படம்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி

உடல் நலக்குறைவால் கரூரில் நேற்று முன்தினம் உயிரிழந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மத்தியக் குழுவின் சிறப்பு அழைப் பாளருமான கே.வரதராஜன்(74) உடல் திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் நேற்று தகனம் செய்யப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் 1946-ல் பிறந்த இவர் கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தற்போது, அகில இந்திய விவ சாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர்களில் ஒருவராகவும், கட்சியின் மத்தியக் குழுவின் சிறப்பு அழைப்பாளராகவும் இருந்து வந்தார்.

கரூரில் உள்ள தன் மகன் வீட்டுக்கு அண்மையில் சென்றிருந்த இவர், சுவாசப் பிரச்சினை யால் நேற்று முன்தினம் உயிரிழந் தார்.

இதையடுத்து அவரது உடல், சொந்த ஊரான திருச்சி ஸ்ரீரங்கத்தில் மேல அடைய வளஞ்சான் தெருவில் உள்ள அவரது இல்லத்துக்கு நேற்று முன்தினம் எடுத்து வரப்பட்டது. உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சியினரின் அஞ்சலிக்காக நேற்று வைக்கப் பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தலை மைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பாலபாரதி, மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்ந்த பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்டோர் கே.வரதராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியது:

விவசாயிகள், உழைக்கும் மக்கள், ஏழை- நடுத்தர மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பலவிதமான போராட்டங்களில் தனது முத்திரையைப் பதித்தவர் வரதராஜன். அனைவருடனும் மிகவும் எளிமையாக பழகக்கூடி யவர். அவரது மறைவு அவரது குடும்பத்துக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள இடதுசாரி இயக்கங்களுக்கும், விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு.

தற்போதைய இக்கட்டான சூழலில் தமிழ்நாடு முழுவ திலும் உள்ள கட்சியினர் கே.வரதராஜனுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாமல் போய்விட்டது என்றார்.

தொடர்ந்து, 2 நிமிட மவுன அஞ்சலிக்குப் பிறகு கே.வரத ராஜனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஓயா மரி சுடுகாட்டில் தகனம் செய்யப் பட்டது.

தலைவர்கள் இரங்கல்

கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, கேரள முதல்வர் பினராயி விஜயன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எஸ்யுசிஐ அமைப்பின் பொதுச் செயலாளர் ரங்கசாமி, அகில இந்திய விவசாயிகள் சங்கபொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா, பொருளாளர் கிருஷ்ண பிரசாத், ஆந்திர மாநில விவசாயிகள் சங்கத் தலைவர் கேசவராவ் ஆகியோர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கே.வரதராஜன் மறைவுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x