Published : 17 May 2020 02:23 PM
Last Updated : 17 May 2020 02:23 PM

‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்துக்கு கிடைக்கும் வரவேற்பு; மனம் பொறுக்காமல் பதறுகிறார் அமைச்சர் பாண்டியராஜன்: தங்கம் தென்னரசு விமர்சனம்

திமுகவிற்கு மக்களிடையே ஏற்பட்டிருக்கும் பெரும் செல்வாக்கையும், ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பையும் கண்டு அமைச்சர் பாண்டியராஜன் தனது மனம் பதறுவதை விடுத்து ஆக்கபூர்வமான பணிகளில் கவனம் செலுத்தட்டும் என்று தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வெளியிட்ட அறிக்கை:

‘நண்டு கொழுத்தால் வளையில் தங்காது’ என்றொரு கிராமத்துப் பழமொழி உண்டு. தொல்லியல் துறை சார்பாக பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை அறிவிக்கும் விசயத்தில் பத்திரிக்கையாளர்களிடம் உளறிக் கொட்டிவிட்டு, பின்பு திமுகவிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்ட பின்னர், தன்னை அடக்கிக் கொண்டு தனது இந்தி வளர்ப்புத் தொழிலில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்த அமைச்சர் பாண்டியராஜன் திமுக தலைவரை விமர்சித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தனது ‘ராஜ விசுவாசத்தை’ எப்படியேனும் காட்டிக்கொள்ள முயன்றிருக்கிறார்.

கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் தொடங்கிய நாள் முதல் திமுக தலைவரும், அவரது உத்தரவில் திமுகவின் முன்னணி நிர்வாகிகளும் தொடங்கி கடைக்கோடித் தொண்டர்கள் வரை களத்தில் இறங்கி மக்களின் துயர் துடைக்க அனுதினமும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்ததோடு மட்டுமல்ல, மனதாரப் பாராட்டியும் கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தை, இந்தக் கரோனா காலத்தில் திமுக தலைவர் அறிவித்த பின்னர், தமிழ்நாடு முழுக்க எந்தப் பாகுபாடும் இன்றி லட்சக்கணக்கான மக்கள் உணவுப் பொருட்களையும், மருத்துவ உதவிகளையும் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர்.

பேரிடர் சூழலில் தங்களைக் காக்கும் கரங்களாக திமுக தலைவரையே நம்புவதால்தான் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்கான நிவாரணம் வேண்டி திமுக தலைவர் அறிவித்த ‘ஹெல்ப்லைன்’ தொலைபேசியை நம்பிக்கையுடன் அழைத்துத் தங்கள் தேவைகளைக் கோரியிருக்கின்றனர்.

திமுகவினரின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளால் இத்தேவைகள் பெருமளவில் தீர்க்கப்பட்டு தேவையான உதவிகள் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு உள்ள நிலையில், எஞ்சியிருக்கும் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வது என்பது, ‘யாருக்கு வந்த விருந்தோ’ என்ற அலட்சிய மனப்பான்மையில் தூங்கிக் கொண்டிருக்கும் தமிழக அரசைத் தட்டி எழுப்புவதற்கன்றி வேறல்ல.

மூன்றே நாட்களில் கரோனாவை அடியோடு ஒழித்துவிடுவோம் என்று முழங்கிய முதல்வர் இன்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டிச் செல்வதை தடுக்க வகையில்லாமல் “மக்கள்தான் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்று கையறு நிலைக்குத் தமிழக மக்களைத் தள்ளிவிட்டிருக்கின்றர்.

அமைச்சர் பாண்டியராஜனோ கரோனா பிடியில் கடந்த இரு மாதங்களாக வாழ்வாதாரம் இழந்து ஏழை மக்கள் கண்ணீர் மல்க கைபிசைந்து நிற்கையில் ஓடோடிப்போய் அதைத் தடுத்து நிவாரணம் வழங்காமல் கடந்த வருடம் முதல்வர் அறிவித்த ஏதோ ஒரு திட்டத்தைச் சொல்லி இன்றைக்கு விளம்பர சுகம் காண விழைகின்றார்.

பேரிடர் காலங்களில் திமுக, இன்றைய ஆட்சியாளர்களைப் போல நெடுஞ்சாலைத் துறை டெண்டர்களை முடிவு செய்யும் வேலையில் மும்மரமாக மூழ்கியிருக்கவில்லை. மாறாக மக்களோடு மக்களாகக் களத்தில் அவர்கள் துயர் துடைக்கும் பணியில் எங்கள் தலைவர் இருக்கின்றார்.

ஊழலில் திளைத்திருக்கும் உங்களைப் பார்த்து பாரத் நெட் டெண்டரை நிறுத்தி வையுங்கள் என்று மத்திய அரசே சொன்னபிறகு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனியாவது முழுமையான நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

திமுகவிற்கு மக்களிடையே எற்பட்டிருக்கும் பெரும் செல்வாக்கையும், ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பையும் கண்டு அமைச்சர் பாண்டியராஜன் தனது மனம் பதறுவதை விடுத்து ஆக்கபூர்வமான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளட்டும்”.

இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x