Published : 16 May 2020 07:45 AM
Last Updated : 16 May 2020 07:45 AM

கோவை மாவட்டம் கரோனா பாதிப்பு இல்லாமல் பச்சை மண்டலமாக மாற மக்களின் ஒத்துழைப்பே காரணம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்

கோவை

பொதுமக்கள் ஒத்துழைப்பால் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை மாறியுள்ளது என்று தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்தார். ஆட்சியர் கு.ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் கே.பெரியய்யா உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில்தான் கரோனாவால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த இரு வாரங்களாக கோவை மாவட்டத்தில் புதிதாக கரோனா தொற்று ஏற்படாததுடன், பச்சை மண்டலமாக விளங்கி வருகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்பே இதற்கு முக்கியக் காரணமாகும்.

உள்ளாட்சித் துறையில் மட்டும் 10,698 பணியாளர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறையில் 2,000-க்கும் மேற்பட்டோர் கரோனா தடுப்புப் பணியில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, பரவாமல் தடுப்பது மட்டுமின்றி, ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உணவு, நிதி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே முதல்முறையாக கோவை மாவட்டத்தில்தான் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் மலிவு விலையில் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு, மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 15 அம்மா உணவகங்களில் தினமும் 22,000 பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. முதல்வரின் நிவாரண நிதிக்காக பல்வேறு தரப்பினர் ரூ.15.56 கோடி வழங்கியுள்ளனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x