Published : 15 Aug 2015 11:17 AM
Last Updated : 15 Aug 2015 11:17 AM

சோனியாவின் குடும்ப நலனுக்காகவே நாடாளுமன்றம் முடக்கப்பட்டது: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சோனியா காந்தியின் குடும்ப நலனுக்காக காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கியதாக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சோனியா காந்தி குடும்பத் தினரும், காங்கிரஸ் கட்சியினரும் பாஜக அரசை செயல்பட விடாமல் செய்ய எதையும் செய்யத் தயாராகிவிட்டார்கள். 1975-ல் இந்திரா காந்தி பிரதமராக தொடர முடியாத நிலை ஏற்பட்டதும், அவசர நிலையை பிரகடனம் செய்து நாட்டையே முடக்கினார்கள். இன்று சோனியா காந்தியிடம் இருந்து அதிகாரம் பறிபோய்விட்டது என்பதால் நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள். காங்கிரஸின் சூழ்ச்சியை பாஜக அரசு முறியடிக்கும்.

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சட்டத்தை மீறி எந்தத் தவற்றையும் செய்யவில்லை. சட்டத்துக்கு உட்பட்டு மனிதாபிமான முறையில் உடல் நலமில்லாத லலித் மோடியின் மனைவிக்கு உதவி செய்துள்ளார். இதற்காக பதவி விலகச் சொல்வதை எப்படி ஏற்க முடியும்? போபர்ஸ் ஊழல் குற்றவாளி குவாத்ரோட்சி, போபால் விஷவாயு விபத்து குற்றவாளி ஆண்டர்சன் ஆகியோரை காங்கிரஸ் கட்சி தப்பிக்கச் செய்தது. லலித்மோடி இந்தியாவிலிருந்து தப்பிச் செல்லவும் காங்கிரஸே காரணம். அப்படி இருக்கும்போது தவறே செய்யாத சுஷ்மா மீது பழிபோடுவதை ஏற்க முடியாது.

காங்கிரஸின் இந்த நோக்கத்தை மக்களிடம் அம்பலப்படுத்த காங்கிரஸின் 44 தொகுதிகளிலும், கம்யூனிஸ்ட் கட்சியின் 9 தொகுதிகளிலும் தலா 50 பொதுக் கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு மத்திய அமைச்சரும், 4 பாஜக எம்.பி.க்களும் பங்கேற்பார்கள்.

மிகப் பெரிய சவால்

சீன அரசு தங்களது பணமான யென்னின் மதிப்பை 48 மணி நேரத்தில் இரு முறை குறைத்துள்ளது. இதனால் சீன பொருள்கள் மலிவான விலையில் இந்திய சந்தையில் குவியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய உற்பத்தித் துறை பாதிக்கப்படும். இது மிகப்பெரிய சவாலாகும். இதனைத் தடுத்து. இந்திய உற்பத்தி துறையை பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

பேட்டியின்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் இல.கணேசன், மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x