Published : 12 May 2020 04:19 PM
Last Updated : 12 May 2020 04:19 PM

இரு வாரங்களாவது வகுப்புகளை நடத்திவிட்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துக: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்

சென்னை

குறைந்தபட்சம் இரு வாரங்களாவது வகுப்புகளை நடத்திவிட்டு அதன் பிறகுதான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். .

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (மே 12) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசு ஜூன் 1-ம் தேதி முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்தக் காலம் முழுவதும் தொடர்ந்து முற்றிலும் வேறான உளவியல் மற்றும் குடும்பச் சூழலில் மாணவர்கள் இருந்திருக்கிறார்கள். இத்தகைய சூழல் வெவ்வேறு விதமான மாணவர்களுக்கு வெவ்வேறு விதமான பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களுக்கு தேர்வு எழுதும் மனநிலையை உருவாக்கிட வேண்டும்.

இம்மாத இறுதியிலும், ஜூன் மாதம் தொடக்கத்திலும் கரோனா நோய்த் தொற்று மேலும் அதிகரிக்கும் எனப் பரவலான கருத்து நிலவுகிறது. இச்சூழ்நிலையில் மாணவர்களை தனிமனித இடைவெளியுடன் தேர்வு எழுத வைக்க என்ன ஏற்பாடுகள் அரசிடம் உள்ளது என்பதும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான போக்குவரத்து ஏற்பாடுகள் என்ன என்பதும் தெரியாத சூழ்நிலையில் ஜூன் 1-ம் தேதி தேர்வுகள் என்ற அறிவிப்பு பொருத்தமானதாக இருக்காது.

இதைக் கவனத்தில் கொண்டு குறைந்தபட்சம் இரு வாரங்களாவது வகுப்புகளை நடத்திவிட்டு அதன் பிறகு பொதுத் தேர்வுகளை நடத்துவதே சரியாக இருக்கும். பாடம் நடத்துவது என்ற நோக்கில் இல்லாமல், கல்வி பயில்வதற்கான மனநிலைக்கு மாணவர்களைக் கொண்டு வந்து தேர்வு எழுத வைப்பது என்ற நோக்கில் தமிழக அரசு இதை அணுக வேண்டும்.

தற்போதைய பணியமர்த்துதல் முறையில் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் அனைத்து உயர்கல்வி, பணியமர்த்துதல் மற்றும் பணி உயர்வுகளுக்கு அடிப்படைக் கூறாக கணக்கில் கொள்ளப்படுகிறது என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, அதற்கு உகந்த முறையில் பள்ளிகள் இயங்குவது, அதன் பிறகு தேர்வுகள் நடத்துவது என்கிற முறையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழக அரசு திட்டமிட்டு நடத்த வேண்டும்" என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x