Published : 11 May 2020 03:24 PM
Last Updated : 11 May 2020 03:24 PM

சென்னை திருவள்ளூர் தவிர மற்ற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது : ராமதாஸ் மகிழ்ச்சி

தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும், அவசரத் தேவைகளுக்காக வெளியில் செல்லும் போது, சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்கள் கரோனா இல்லாத பகுதிகளாக மாறுவது உறுதி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை :

“தமிழ்நாட்டில் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் கரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதிலும், பிற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது. அடுத்த சில நாட்களுக்கு புதிய தொற்றுகள் ஏற்படுவதை தடுத்தால், 19 மாவட்டங்களின் நிலையை முன்னேற்றி விட முடியும் என்பது மனநிறைவு அளிக்கிறது.

கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் ஏப்ரல் மாத இறுதியில் தமிழகம் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை எட்டியிருந்தது. ஏப்ரல் இறுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வந்தவர்களை விட, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

அடுத்த சில நாட்களில் கரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு விடும் என்று நினைத்த போதுதான், கோயம்பேடு சந்தை மூலம் தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அதனால், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், விழுப்புரம், அரியலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 104 முதல் அதிகபட்சமாக 3,839 என்ற அளவுக்கு அதிகரித்திருக்கிறது.

அதேநேரத்தில் பிற மாவட்டங்களில் கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதியில் தொடங்கி இன்று வரை 27 நாட்களாகவும், சிவகங்கை மாவட்டத்தில் ஏப்ரல் 20 ஆம் தேதியில் தொடங்கி 22 நாட்களாகவும் புதிய தொற்றுகள் ஏற்படவில்லை.

இந்த ஒரு மாவட்டங்களிலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்துவிட்டதால், அவை கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களாக உருவெடுத்துள்ளன. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 12 நாட்களாக புதிய தொற்றுகள் இல்லை. அங்கு ஒருவர் மட்டும் தான் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதுமட்டுமின்றி, கோவை, தருமபுரி, கரூர், கன்னியாகுமரி, நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய 15 மாவட்டங்களில் இம்மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து நேற்று வரையிலான 10 நாட்களில் பத்துக்கும் குறைவான எண்ணிக்கையில்தான் புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளன என்பதும், அவற்றிலும் பெரும்பாலானவை கோயம்பேடு சந்தை மூலம் ஏற்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

மற்றொருபுறம் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவை, தருமபுரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கரூர், நீலகிரி, புதுக்கோட்டை, சேலம், திருவாரூர், திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி, திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் பத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை நிறைவு செய்வதற்காக மத்திய அரசு வகுத்துள்ள புதிய விதிகளின்படி இவர்கள் அடுத்த 5 முதல் 7 நாட்களுக்குள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விடுவார்கள். அதுவரை இந்த மாவட்டங்களில் புதிய தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டால், இவை கரோனா இல்லாத மாவட்டங்களாக மாறிவிடும். இவற்றையும் சேர்த்து தமிழகத்தில் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களின் எண்ணிக்கை 16 ஆக உயரும்.

தமிழ்நாட்டில் சிவப்பு மண்டலங்களாக மாறியுள்ள திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, நாமக்கல், தேனி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வருவோரின் எண்ணிக்கை 16 முதல் 28 என்ற அளவில் தான் உள்ளன. இந்த மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு புதிய தொற்றுகள் ஏற்படுவது தடுக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களில் பலர் குணமடைந்து, மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருவோரின் எண்ணிக்கை 15க்கும் கீழாகக் குறைந்து விடும்..

அதன்பின்னர் அந்த மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாக மாறி விடும். இந்த ஆக்கபூர்வ மாற்றங்கள் மூன்றாவது ஊரடங்கு முடிவடையும் காலமான மே 17 ஆம் தேதிக்குள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதன் பின்னர் கரோனா வைரஸ் நோயால் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்த முடியும்.

மேற்குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் கரோனா வைரஸ் இந்த அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டதற்கு அந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல்துறை உயரதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோரின் புதுமையான அணுகுமுறைகளும், கடுமையான உழைப்பும்தான் காரணம் என்றால் அது மிகையல்ல.

அதேபோன்ற புதுமை அணுகுமுறைகளும், கடுமையான உழைப்பும் கரோனா வைரஸ் பாதிப்புகளை முழுமையாக கட்டுப்படுத்தும் வரை தொடர வேண்டும். இவர்கள் அனைவரும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும்.

அத்துடன் தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அவசரத் தேவைகளுக்காக வெளியில் செல்லும்போது, சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்கள் கரோனா இல்லாத பகுதிகளாக மாறுவது உறுதி”.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x