Published : 11 May 2020 01:03 PM
Last Updated : 11 May 2020 01:03 PM

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் புகைப்பட, வீடியோ கேமரா கலைஞர்களுக்கு உதவிடுக: வைகோ கோரிக்கை

நிழற்படக் கலைஞர்களுக்குத் தனி நலவாரியம் இல்லாததால், கரோனா பேரிடர் பாதித்துள்ள இதுபோன்ற காலங்களில் அரசின் சார்பில் பிற தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலவாரிய உதவித் தொகை அவர்களுக்கு கிடைப்பது இல்லை. ஆகவே அவர்களுக்கு உதவ வேண்டும் என வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:

''கரோனா கொள்ளை நோயால் அனைத்துத் துறைகளிலும் தொழில்கள் முடங்கி, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் கட்டமாக மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் புகைப்படத் தொழிலை நம்பியுள்ள மூன்று லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

மிகச் சிறிய அளவில் கடை வைத்து வீடியோ மற்றும் புகைப்படம் சார்ந்த தொழில்களைச் செய்து வரும் இவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு அதிகபட்சம் நான்கு மாதங்கள் மட்டுமே திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நிழற்படம், ஒளிப்படம் எடுக்க வாய்ப்புகள் கிடைக்கும். பின்னர் மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு நிகழ்ச்சிகள் கிடைப்பதே அரிதாகும்.

ஒரு நிகழ்ச்சிக்கு வீடியோ மற்றும் நிழற்படம் எடுப்பதற்கும், தொழில்நுட்பப் பணிகளை முடித்துக் கொடுப்பதற்கும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நாட்கள் ஆகும். ஒரு சிறிய நிகழ்ச்சிக்கு 25 ஆயிரம் வாங்கும் இவர்கள், வீடியோ எடுக்கும் கலைஞருக்கு 2 ஆயிரம் ரூபாயும், நிழற்படம் எடுக்கும் இரண்டு பேருக்கு 4 ஆயிரம் ரூபாயும் ஊதியம் அளிக்கிறார்கள். ஆல்பம், வீடியோ எடிட்டிங், கேமரா வாடகை என்று ரூ.15 ஆயிரம் வரை செலவுகள் ஆகிவிடும். மீதமுள்ள தொகையை வைத்துதான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்.

கரோனா நோய்ப் பரவலால் மண்டபங்கள், கோயில்கள் மூடப்பட்டதால் விசேஷ நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்ப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாக நிழற்படக் கலைஞர்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

நிழற்படக் கலைஞர்களுக்குத் தனி நலவாரியம் இல்லாததால், கரோனா பேரிடர் பாதித்துள்ள இதுபோன்ற காலங்களில் அரசின் சார்பில் பிற தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலவாரிய உதவித்தொகை இவர்களுக்குக் கிடைப்பது இல்லை.

ஒவ்வொரு மனிதரின் வாழ்வையும் ஆவணப்படுத்தி, எதிர்காலத் தலைமுறைக்கு வழங்கும் கடமையைச் செய்து வரும் நிழற்படக் கலைஞர்கள் தங்கள் வாழ்வில் ஒளி இழந்து தவிப்பதைக் கருத்தில் கொண்டு, லட்சக்கணக்கான புகைப்படக் கலைஞர்களுக்கு தமிழக அரசு சிறப்பு உதவித்தொகை வழங்கி அக்குடும்பங்களைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x