Published : 09 May 2020 10:12 AM
Last Updated : 09 May 2020 10:12 AM

திருமணப் புரோகிதர்கள், சமையல்காரர்கள், சலவைத் தொழிலாளர்களுக்கும் நிதியுதவி வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

திருமணப் புரோகிதர்கள், சமையல்காரர்கள், திருமண வரவேற்பினர், வைதீகத் தொழிலில் ஈடுபடுபவர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கும் தமிழக அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மே 9) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் கரோனாவால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் வருமானம் இன்றி சிரமப்படுகின்ற ஏழை, எளிய மக்களுக்கு, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்வது பலன் தருகிறது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் உள்ள புரோகிதர்கள், சமையல்காரர்கள் உள்ளிட்டோருக்கும் நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும்.

குறிப்பாக, திருமணம், திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சமையல் வேலைக்குச் செல்லும் சமையல்காரர்கள், சமையலுக்கு உதவி செய்பவர்கள், நாதஸ்வரம், தவில் வாசிக்கும் வித்வான்கள், திருமண வரவேற்பினர் போன்றோர் ஊரடங்கினால் வேலையின்றி, வருமானம் இன்றி சிரமப்படுகிறார்கள்.

அதாவது, நடுத்தரக் குடும்பமாக இருந்தாலும் வேலைக்குச் செல்வதால் கிடைக்கின்ற வருமானத்தை வைத்துக்கொண்டு தான் அவர்களின் குடும்பம் வாழ்வாதாரத்தைத் தொடர்கிறது. ஆனால், இப்போது வேலையின்றி, பொருளாதாரம் இன்றி அன்றாடக் குடும்ப வாழ்க்கையை நடத்துவது சிரமமாக உள்ளது.

அதேபோல வைதீகத் தொழிலில் ஈடுபட்டுவரும் சாஸ்திரிகள், சிவச்சாரியார்கள், கோயிலில் பூஜை செய்பவர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆகியோரும் ஊரடங்கால் தொழிலில் ஈடுபட முடியாமல் வருமானம் கிடைக்கவில்லை. இவர்களும் வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டினால் மட்டுமே அவர்களின் அன்றாடக் குடும்பச் செலவுக்குப் பொருளாதாரப் பிரச்சினை இருக்காது.

எனவே, தமிழக அரசு கரோனாவால், ஊரடங்கால் வேலையின்றி, வருமானம் இன்றி தவிக்கின்ற புரோகிதர்கள், சமையல்காரர்கள், கோயிலில் பூஜை செய்பவர்கள், வைதீகத் தொழிலில் ஈடுபடுபவர்கள், திருமண வரவேற்பினர் ஆகியோருக்கும் மற்றும் துப்புரவாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் போன்ற நலிந்த பிரிவினருக்கும் நிதியுதவி வழங்கிட வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x