Last Updated : 07 May, 2020 04:39 PM

 

Published : 07 May 2020 04:39 PM
Last Updated : 07 May 2020 04:39 PM

பொதுமுடக்கத்தால் தடைப்பட்ட சித்திர புத்திர நாயனார் நோன்பு!

தென்காசி மாவட்டம் சோலைசேரி கிராமத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற நயினார் நோன்பு நிகழ்ச்சியில், சித்திர புத்திர நாயனாரின் கதைப் பாடலைப் படிக்கிறார் கிராமத்துப் பெரியவர் | கோப்புப் படம்.

சித்ரா பௌர்ணமி புத்தரின் பிறந்த நாள் மட்டுமல்ல, எமனின் சபையில் பாவ, புண்ணிய கணக்குகளைப் பதிவு செய்து பராமரிப்பதாகச் சொல்லப்படும் சித்திர குப்தனின் பிறந்த நாளும் அன்றுதான்.

இந்த விழா நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள கிராமக் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஊர் அம்மன் கோயிலிலோ, பிள்ளையார் கோயிலிலோ கதை படிக்கத் தெரிந்த பெரியவர் ஒருவர் புதிய பாய் அல்லது ஜமுக்காளம் விரித்து உட்கார்ந்து சித்திர புத்திர நாயனார் கதையைப் படிப்பார். அங்கே நிறைநாழி நெல், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், சந்தனம், குங்குமம் போன்றவை படைக்கப்பட்டிருக்கும். ஏடும் எழுத்தாணியும் அவசியம். இப்போது அதற்குப் பதில் நோட்டும் பேனாவும் வைக்கிறார்கள். பூரண கும்பம்தான் சாமி. சில ஊர்களில் மட்டும் சித்திர புத்திரரின் உருவப்படத்தை வைத்து வழிபடுவார்கள்.

இவ்வாறு கதைப்பாடல் படிக்கிற இடத்துக்கு கிராமத்தவர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருந்து நெல், மிளகாய் வற்றல், உப்பு, மஞ்சள் போன்றவற்றைக் கொண்டுவந்து படைப்பார்கள். பிற விளைபொருட்களையும் காணிக்கையாகச் செலுத்துவார்கள். பொதுமுடக்கம் அமலில் இருப்பதால், இந்த ஆண்டு தென்மாவட்ட கிராமங்களில் இந்தத் திருவிழா நடைபெறவில்லை. இந்தக் கதைப்பாடலை பாடினால், இறப்புக்குப் பிறகு சொர்க்கம் நிச்சயம் என்ற நம்பிக்கை இருப்பதால், வழக்கமாகக் கதை படிப்பவர்கள், தங்கள் வீடுகளில் இருந்தபடியே இந்தப் பாடலைப் பாடிக்கொண்டார்கள்.

யார் இந்த சித்திர புத்திர நாயனார்?
முத்தொழில்களில் முக்கியமான தொழிலான அழித்தல் தொழிலைக் கவனிக்கும் சிவபெருமான், இறந்தவர்களுக்குத் தண்டனை தரும் பொறுப்பை எமனிடம் ஒப்படைத்தார். ஆனால், ஒவ்வொரு மனிதனும் செய்த பாவ, புண்ணியங்களைக் கணக்கில் வைத்துக்கொள்ள ஒருவர் வேண்டுமல்லவா? அதற்காக படைக்கப்பட்டவர்தான் சித்திர புத்திர நாயனார் என்கிறது இந்து புராணம்.

இவரை உருவாக்குவதற்காக தங்கப்பலகையில் ஓர் அழகான குழந்தை படத்தை வரைந்தார் சிவபெருமான். சித்திரம் தத்ருபமாக இருப்பதைக் கண்ட அன்னை பராசக்தி, ‘கண்மணியே வா’ என்று அழைக்க, பொற்பலகையில் இருந்து வெளியே வந்ததாம் குழந்தை. சித்திரத்தில் இருந்து புத்திரனாக மாறியதாலும், சித்ரா பௌர்ணமி அன்று பிறந்ததாலும், அவர் சித்திர புத்திரர் ஆனார். தனது புதல்வர்களான விநாயகர், முருகனுக்கு விரதம், வழிபாடு இருப்பதைப்போலவே, சித்திர புத்திரருக்கும் அவரது பிறந்த நாளான சித்ரா பௌர்ணமியன்று வழிபாடு உண்டு என்று சிவபெருமான் அருளியதால்தான் இந்த விரதம் தொடங்கியது என்கிறது சித்திர புத்திர நாயனார் கதைப்பாடல்.

புத்தர்தான் சித்திர புத்திரர்
ஆனால், இந்தக் கதையை மறுக்கிறார் பேராசிரியரும், நாட்டுப்புற ஆய்வாளருமான டி.தருமராஜ். "புத்த மதம் இந்து மதத்தால் உள்வாங்கப்பட்டதன் எச்சம்தான் இந்தச் சடங்கு. சித்தார்த்தன் என்பதும், தர்மராஜன் என்பதும் புத்தரின் மறுபெயர்கள். புத்த மதத்தை உள்வாங்கிய இந்து மதம், தர்மராஜனை எமதர்மராஜனாகவும், சித்தார்த்தனை சித்திர புத்திரனாகவும் மாற்றிவிட்டது. இளவசரனாகப் பிறந்த சித்தார்த்தன் மனிதர்களுக்கு மரணமே கிடையாது என்று நினைத்திருந்தபோது, மரணத்தைப் பார்த்துத்தான் ஞானம் பெற்றார். அந்தக் கதை, சித்தார்த்தன் மரண கணக்கை எழுதுகிறவன் என்று மாறிவிட்டது.

தென்மாவட்ட மக்கள் ஒரு காலத்தில் புத்த மதத்தினராக இருந்து, சித்ரா பௌர்ணமியன்று புத்த பூர்ணிமாவைக் கொண்டாடியவர்கள். அதன் தொடர்ச்சியாகவே இப்போது இந்த நயினார் நோன்பைக் கடைப்பிடிக்கிறார்கள். விரதம் என்பது வெறுமனே பட்டினியிருப்பது மட்டுமல்ல. விரதம் என்றால், உணவை விலக்கி நல்ல நூல்களை வாசிப்பது. அதைத்தான் இந்தக் கிராம மக்களும் கடைப்பிடிக்கிறார்கள்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x