Published : 07 May 2020 11:47 AM
Last Updated : 07 May 2020 11:47 AM

கோடை உழவுக்கு மண் அள்ள அனுமதி: தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மானாவாரி நிலங்களில் கோடை உழவு மேற்கொள்ள நீர்நிலைகளில் இருந்து கரம்பை மண் அள்ள அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேர் மானாவாரி விவசாய நிலங்களில் ஆண்டுதோறும் ராபி பருவத்தில் சிறு தானியங்கள், பயறு வகைகள், பயிர் வகைகள், பணப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் விவசாயிகள் தங்கள் கிராமங்களில் உள்ள நீர்நிலைகளான குளம், குட்டை, ஊருணி, போன்றவற்றில் மாட்டு வண்டிகள் மூலம் கரம்பை மண் அள்ளி விவசாய நிலங்களில் போட்டு கோடை உழவு செய்வது வழக்கம்.

கரம்பை மண் பயிர்களின் வேர் பகுதியில் நன்கு ஈரப்பதத்தை தரக்கூடியதாகும். மேலும், பயிர்களின் வளர்ச்சிக்கு நல்ல சத்தான உரத்தையும் தருவதால், கூடுதல் மகசூல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் இதனை பின்பற்றி வருகின்றனர்.

இந்தாண்டு சித்திரை மாத பிறப்பு தினத்தன்று பொன்னேர் உழுதலுடன் கோடை உழவை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். தொடர்ந்து நீர்நிலைகளில் இருந்து கரம்பை மண் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று தமிழக அரசு நீர்நிலைகளில் இருந்து விவசாய பயன்பாட்டுக்கு மண் அள்ள அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டம் வானிலை ரீதியாக மழை மறைவு மாவட்டமாகும். எனவே மழைக்காலங்களில் பெய்யக்கூடிய சிறிதளவு மழையை நம்பியே விவசாயம் செய்ய வேண்டும். எனவே பெய்யக்கூடிய மழையை முறையாக பயன்படுத்தி சாகுபடி செய்ய வேண்டி உள்ளது.

கோடை உழவுக்காக நீர் நிலைகளில் கரம்பை மண் அள்ளப்படும்போது நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆழப்படுத்தப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் பெய்யக்கூடிய மழை நீர் அதிக அளவில் சேமிக்கப்படுகிறது.

இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயருகிறது. கால்நடைகளுக்கு குடிநீராக பயன்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால், நீர்நிலைகள் வறண்டு கரம்பை மண் அள்ள உகந்த நேரமாக உள்ளது. இந்நிலையில் நீர்நிலைகளில் மண் அள்ள அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், மாவட்ட நிர்வாக துரிதமாக செயல்பட்டு, விண்ணப்பிப்பவர்கள் விவசாயிகள் தானா என்பதை உறுதி செய்து, அவர்களுக்கு மண் அள்ள அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x