Published : 26 Aug 2015 07:53 AM
Last Updated : 26 Aug 2015 07:53 AM

சிதம்பரம் கோயிலில் பாஜக தலைவர் அமித்ஷா தரிசனம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் கோயில் மற்றும் நந்தனார் மடத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று தரிசனம் செய்தார். இதையொட்டி கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று காலை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலுக்கு வந்தார். அவருடன் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அகில இந்திய துணைத் தலைவர் முரளிதரராவ், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் மோகன்ராஜுலு உள்ளிட்டோர் வந்தனர்.

கோயில் வாசலில் கட்சியின் மாநில அமைப்பு இணைச் செயலாளர் கேசவ விநாயகம், மாநிலச் செயலாளர் ஆதவன், மாவட்டத் தலைவர் சுகுமாறன் ஆகியோர் அமித்ஷாவுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர், நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் சார்பாக அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு, கோயிலுக்குள் சென்ற அமித்ஷா, நடராஜர் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், கோவிந்தராஜ பெருமாள் சன்னதி, ஆதிமூல நாதர் சன்னதி ஆகிய இடங்களிலும் அவர் சாமி கும்பிட்டார்.

அதன் பிறகு, கார் மூலம் காட்டுமன்னார்கோவில் சாலையில் உள்ள நந்தனார் மடத்துக்கு அமித்ஷா சென்றார். அங்கு நந்தனார் கல்வி கழகம் சார்பில் நிர்வாகிகள் டாக்டர் சங்கரன், ஜெயச்சந்திரன் வரவேற்பு அளித்தனர். நந்தனார் மடத்தில் உள்ள சிவலோக நாதர் உடனுறை சவுந்தரநாயகி அம்பாளை வழிபட்டார். மேலும், அங்குள்ள சுவாமி சகஜாநந்தா சிலைக்கு மாலை அணிவித்தார். அதன் பிறகு, புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார். அமித்ஷா வருகையையொட்டி கடலூர் எஸ்பி விஜயகுமார் தலைமையில் சிதம்பரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 6 மணி முதல் நான்கு கோபுர வாசல்களிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. கீழவீதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x