Published : 06 May 2020 10:14 AM
Last Updated : 06 May 2020 10:14 AM

நாளை டாஸ்மாக் திறப்பு: மது பானங்கள் விலையை உயர்த்தியது அரசு

நாளை டாஸ்மாக் திறக்கப்பட உள்ள நிலையில் திடீரென மதுபானங்களின் விலையை 20 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது அரசு.

தமிழகத்தில் கரோனா பரவலை முன்னிட்டு பொதுமக்கள் கூடும் அனைத்து விஷயங்களும் முடக்கப்பட்டது. மார்ச் 25 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் கடந்த 40 நாட்களாக தமிழகத்தில் மதுபானம் இல்லாத நிலை உருவானது.

இதனால் வீட்டில் குடும்ப வன்முறை, குற்றச் சம்பவங்கள், வன்முறை, சாலை விபத்து உள்ளிட்டவை வெகுவாக குறைந்தது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் அரசுக்கு தினசரி ரூ.80 வருவாய் பாதிக்கப்பட்டது. ஆனாலும் கோடானுகோடி குடும்பங்கள் நலனை கருத்தில் கொண்டு மதுக்கடைகளை நிரந்தமாக மூடிவிடும்படி அரசியல்கட்சித்தலைவர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் மூடப்பட்ட மதுபான கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தது. பச்சை மண்டலங்களில் மட்டும் திறக்கலாம் என அறிவித்தது, ஆனால் அனைத்து மாவட்டங்களிலும் சென்னை நீங்கலாக டாஸ்மாக் கடைகளை திறக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் நோய்ப்பரவல் மீண்டும் அதிகரிக்கும் என அனைவரும் எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் திடீரென மதுபானங்களின் விலையை அரசு உயர்த்தியுள்ளது. இதுகுறித்த அரசு அறிவிப்பு வருமாறு:

“இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15 சதவீதம் உயர்த்தியுள்ள காரணத்தினால், சாதாரண வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 10 ரூபாய் கூடுதலாகவும், நடுத்தர மற்றும் பிரீமியம் வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாய் கூடுதலாகவும் மே 07 முதல் உயர்த்தப்படுகிறது”.

மத்திய அரசு ஆயத்தீர்வை வரியை உயர்த்தியதால் தமிழகத்தில் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது மற்ற மாநிலங்களில் அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. மதுக்கடைகளை திறந்துள்ள நிலையில் வருமானமின்றி வாடும் குடிமகன்கள் மேலும் கூடுதலாக மதுவுக்கு பணம் செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x