Last Updated : 04 May, 2020 07:18 PM

 

Published : 04 May 2020 07:18 PM
Last Updated : 04 May 2020 07:18 PM

கடைகள் திறப்பு, சாலைகளில் அணிவகுத்த வாகனங்கள்: திடீரென சகஜ நிலைக்குத் திரும்பிய தூத்துக்குடி- போலீஸார் உஷாரானதால் மீண்டும் கட்டுக்குள் வந்தது

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இன்று காலை 60 சதவீதத்துக்கு மேலான கடைகள் திறக்கப்பட்டன. சாலைகளிலும் மக்களும் சமூக இடைவெளியைப் பற்றி கவலைப்படாமல் வழக்கம் போல நடமாட தொடங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மூன்றாவது முறையாக மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி அரசு அறிவிப்பு செய்துள்ளது.

எந்தெந்த கடைகளை, நிறுவனங்களை, தொழிற்சாலைகளை திறக்கலாம் என்பது தொடர்பான விரிவான நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

இந்த நெறிமுறைகளை பற்றி கவலைப்படாமல் தூத்துக்குடி நகரில் இன்று காலை பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. அரசு திறக்க அனுமதி அளிக்காத கடைகளும் திறக்கப்பட்டன.

குறிப்பாக சில நகைகடைகள், ஜவுளிக்கடைகள், வணிக வளாகங்களில் உள்ள கடைகளும் திறக்கப்பட்டன. நகரில் 60 சதவீதத்துக்கு மேலான கடைகள் திறக்கப்பட்டதால் சாலைகள் மீண்டும் களைக்கட்ட தொடங்கின.

பொதுமக்களும் சமூக இடைவெளியை பற்றி கவலைப்படாமல் வழக்கம் போல சாலைகளில் நடமாட தொடங்கின. இதனால் சாலைகளில் வாகனங்கள் அதிகளவில் அணிவகுத்து சென்றன.

இது குறித்து ஆட்சியர், எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல்கள் சென்றன. இதையடுத்து அரசு அனுமதி அளிக்காத கடைகள், வர்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதிக்கக்கூடாது என காவல் துறையினருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதன்பேரில் திறந்திருந்த பல கடைகளை காவல் துறையினர் அடைக்கச் சொல்லி வற்புறுத்தினர். இதனால் காலையில் திறக்கப்பட்ட பல கடைகள் சில மணி நேரங்களில் அடைக்கப்பட்டன.

இதேபோல் சாலைகளில் வாகனங்களில் சென்றவர்களையும் காவல் துறையினர் கட்டுப்படுத்தினர். அதன் பிறகே நிலமை ஒரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மேலும், அரசு அறிவுறுத்தியுள்ள நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x