Published : 02 May 2020 06:50 PM
Last Updated : 02 May 2020 06:50 PM

ஊரடங்கு; சென்னையில் தளர்வு எதற்கு, தடை எதற்கு?- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் (Containment Zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

சென்னையில் என்னென்ன தளர்வு, எதற்கு கட்டுப்பாடு என்பது குறித்து முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அத்தியாவசியச் செயல்பாடுகள், பணிகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

.தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் சென்னையில்தான் அதிகம் என்பதால் சென்னையில் சிறப்பான ஏற்பாடுகள் அரசால் செய்யப்பட்டு வருகிறது. சென்னைக்கு மட்டுமே மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர், ஆட்சியர் தவிர 10 ஐஏஎஸ் அதிகாரிகள், அதற்கு இணையாக ஐபிஎஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் நடக்கிறது.

இந்நிலையில் ஊரடங்கில் சென்னை மாநகரில் என்னென்ன தளர்வுகள் என்பது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர – Except Containment Zones):

கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகளுக்கு அனுமதி

* கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமானத் தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும்.

* அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் அனுமதிக்கப்படும்.

ஐடி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி

· சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர்/ மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக்கேற்ப, 25 சதவிகித பணியாளர்களுடன் (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும்.

. நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.

· தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ((IT & ITeS): 10 சதவிகிதப் பணியாளர்களைக் கொண்டு (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.

· அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் மின் வணிக நிறுவனங்கள் (e-Commerce), ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம்.

· உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, பார்சல் மட்டும் வழங்கலாம்.

முடி திருத்தகங்களுக்கு அனுமதி இல்லை- அனைத்து தனிக்கடைகளுக்கு 11-5 மணி வரை அனுமதி

அனைத்து தனிக் கடைகள் ((Standalone and neighbourhood shops) (முடி திருத்தகங்கள்/ அழகு நிலையங்கள் தவிர), ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

பிளம்பர், ஏசி மெக்கானிக், எலக்ட்ரீஷியன் பணியாற்ற அனுமதி:

· பிளம்பர், எலெக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள், சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள் (Home Care Providers) வீட்டு வேலைப் பணியாளர்கள் ஆகியோர் பணியாற்றலாம் (சென்னை மாநகராட்சி ஆணையர் / சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர்).

இவ்வாறு சென்னையில் தளர்வு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் கண்காணிப்புப் பகுதிகளில் இவ்வனுமதி கிடையாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x